தமிழகம்

மீனவர்கள் உயிர் காக்க பேரவையில் உடனே தீர்மானம் நிறைவேற்றுக: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழகச் சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் எழுகின்றன. மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஆண்டு தோறும் அக்டோபர் திங்களில் கூட்டப்படும் குளிர்காலத் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு பொய்க் காரணம் கூறி இலங்கை அரசு தூக்குத் தண்டனை விதித்து, அதனைக் கண்டித்து தமிழக அரசு சார்பிலும், அனைத்துக் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தண்டனையைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

எனவே இந்த நிலையில் தமிழகச் சட்டப் பேரவையினைக் கூட்டி, தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இதுதவிர தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளைப் பற்றியும் பேரவையில் விவாதிக்க வேண்டியியுள்ளது.

எனவே, தமிழகச் சட்டப் பேரவையினை கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT