மக்கள் விரும்புவது பூரண மதுவிலக்குதான் என்று காந்தி பேரவையின் தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுக்கடைகளை எதிர்த்துப் போரிடுவது சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கியப் பணியாக இருந்தது. நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்ற காந்தியின் கனவு 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேறவில்லை.
தமிழ்நாட்டை ஆள்பவர்கள் நெடுஞ்சாலைகளில் இருந்த 500 மதுக்கடைகளை மூடுவோம் என்றார்கள். ஆனால் எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டன என்பது தெரியவில்லை. 2,700 மதுக்கடைகளையாவது முதலில் மூடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. ஆனால், 500 கடைகளை மட்டுமே மூடுவோம் என்கிறது அரசு. மக்கள் வேண்டுவது பூரண மதுவிலக்கே.
1917-ல் ராஜாஜியால் மது விலக்கு கொண்டுவரப்பட்டு இன்று நூறாண்டு ஆகிறது. அதை மனதில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் பூரண மதுவிலக்கு கோரி மீண்டும் பாத யாத்திரை செல்ல தயாராக இருக் கிறோம்.