தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சியகம் மற்றும் யுனிசெப் சார்பில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கான சட்டத்தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கருத்தரங்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:

குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள் எத்தருணத்திலும் மறுக்கப்படக் கூடாது. இதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு காலகட்டங்களில் மாநாடுகளைக் கூட்டி சர்வதேச அளவில் பல்வேறு தீர்மானங்களை வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஏராளமான சட்டங்கள் நம்மிடம் இருந்தும் அதை முறையாக அமல்படுத்த முடியவில்லை. சிறார் நீதித்துறை வாரியங்களில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளின் உரிமைகள் பற்றி முழுமையாக தெரிவதில்லை. தங்கள் குழந்தைகளை வீட்டில் எவ்வாறு நடத்துவார்களோ, அதேபோலத் தான் பிற குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். குழந்தைகளை குற்றவாளி களாகப் பார்க்கக்கூடாது. நாட்டின் எதிர்காலமே அவர்களி்ன் கையில் தான் உள்ளது. எனவே எதிர் காலத்தை வலிமையாகவும், வள மானதாகவும் மாற்ற குழந்தை களின் நலன் மற்றும் உரிமைகள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.நாகமுத்து, எஸ்.மணிக்குமார், ஜி.ஜெயச்சந்திரன், ராஜி்வ் ஷக்தேர், நிஷாபானு மற்றும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தாமா சேஷாத்ரி நாயுடு, யுனிசெப் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கான முதன்மை அதிகாரி ஜாப் ஜக்காரியா, யுனிசெப் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜாவிர் அகிலார், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷா ஐசக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.

SCROLL FOR NEXT