தமிழகம்

விருதுநகர்: கட்டுக்கு ரூ.100 உயர்வு; கரும்பு அறுவடை தீவிரம்

செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கட்டுக்கு ரூ.100 அதிகரித்துள்ளதால் விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்திக்கு பெயர்பெற்றது முருகனேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள். ஆண்டுதோறும் இப்பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், வறட்சி காரணமாகவும் சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, கடந்த ஆண்டு ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ரூ. 250 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. தற்போது, முருகனேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு அறுவடைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியும், கரும்பு வியாபாரியுமான ஆர். செந்தில்குமார் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கரும்பு சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது. இருந்தாலும், பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புகளுக்கான தேவை அதிகம் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகளை சிவகாசி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் விற்பனைக்குக் கொண்டு செல்கிறோம்.

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,400 முதல் 1,500 கட்டு கரும்பு வரை கிடைக்கும். திங்கள்கிழமை பிற்பகல் அல்லது மாலையில்தான் கரும்பு விற்பனை சூடு பிடிக்கும் என்றார்.

SCROLL FOR NEXT