புழல் சிறையில் இருந்து நேற்று மாலை 5.45 மணி அளவில் ராம்குமார் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராம்குமாரின் உடல் அங்குள்ள பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த இடத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நுழைவாயில்கள் மூடப்பட்டன. ராம்குமார் இறந்த தகவல் அறிந்து அந்தப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஏராளமான செய்தியாளர்களும் குவிந்திருந் தனர். இதனால், ராயப்பேட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை 10 மணிக்குமேல் நடக்கும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். சுவாதி கொலை வழக்கை விசாரித்து வரும் நுங்கம்பாக்கம் போலீஸார் கூறும்போது, ‘‘ராம்குமார் இறந்த செய்தியை சிறைத்துறை அதிகாரிகள் எங்களுக்கு முறைப்படி தெரிவித்துள்ளனர். இது முக்கியமான வழக்கு என்பதால், பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் சுவாதி கொலை தொடர்பாக வழக்கு நடந்துவருவதால், தேவைப்பட்டால் இந்த வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்போம்’’ என்றனர்.