திமுக பொதுக் குழுக் கூட்டத்தில், தாம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட விளக்கத்தில், 'தி.மு.கழகப் பொது குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, இறுதியாக நான் உரையாற்றியபோது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பாஜகவுடனும் தி.மு.கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசினேன்.
அந்தப் பேச்சினைப் பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள சிலர் வேண்டுமென்றே என்னுடைய கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போல பேசி வருகிறார்கள்.
ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைபட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.
எனவே, பத்திரிகையாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப்பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கருணாநிதி கூறியுள்ளார்.