தமிழகத்தில் மதுவுக்கு எதிராக மாணவர் சமுதாயம் போராட வேண்டுமென, காந்தியவாதி சசிபெருமாள் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைக்காட்டி புதூர் விநாயகர் கோயில் மண்டபத்தில் ‘எங்கே விடியல்’ நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங் கேற்ற காந்தியவாதி சசிபெரு மாள் நூலை வெளியிட்டு பேசியது:
பேனா முனைக்கு சக்தி அதிகம் என்பது வரலாற்று உண்மை. சமுதாயத்தில் நிலவும் சீரழிவுகள் குறித்து, தாகம் அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோவிந்தராஜ் மனம் வெதும்பி எழுதியுள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுக் கள். இன்றைக்கு குடும்பங்களில் தாய், தந்தைகளுக்கு மகன்கள் ஈமச்சடங்கு செய்த காலம்போய், மகனுக்கு தாய், தந்தையர் ஈமச்சடங்கு செய்யும் அளவுக்கு மது போதை தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது.
20 லட்சம் சகோதரிகள் தங்களின் கணவனை இழந்து வாழ்கிறார்கள். இனி, மதுக்கடைகளை மூடும் போராட்டத்தில் இந்த சகோதரிகளின் பங்கு அதிகம் இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் மதுவால் சீரழிந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிறுவர்கள்கூட மதுவுக்கு அடிமையாகிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழ்த் தாய்களால்தான் முடியும். இதற்கு, மாணவர் சமுதாயம் தலைமை ஏற்று போராட்டங்களை நடத்த வேண்டும். உலகில் மாணவர் சமுதாயப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு கிடையாது என்றார்.
அவிநாசி - அத்திக்கடவு போராட்டக் குழுவைச் சேர்ந்த பொன்னுக்குட்டி, தாகம் அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.