சென்னை மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் 7 இடங்களில் மாநகராட்சி சார்பில் ‘அம்மா வாரச் சந்தை’ விரைவில் திறக்கப்பட உள்ளது. அதில் காய்கறி, மளிகை, பாத்திரங்கள், மின்னணு சாதனங்கள் உட்பட 1,256 பொருட்களை விற்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் நிரந்தரமாக வசிப்பவர்கள், கல்வி, மருத்துவம், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக தங்கி செல்பவர்கள் உட்பட 1 கோடி பேர் உள்ளனர். உலகமயமாதல், நகரமயமாதல் ஆகிய காரணங்களால் விலைவாசியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு அனைத்து விதமான பொருட்களையும் மலிவு விலையில் வழங்க, மாநகராட்சி சார்பில் ‘அம்மா வாரச் சந்தை’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ஒரு இடம் வீதம், வாரம் முழுவதும் 7 இடங்களில் வாரச் சந்தை திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சந்தையில் 200 கடைகள்
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் முதல்கட்டமாக அரும்பாக்கம் பசுமை தீர்ப்பாய அலுவலகம் அருகில், மின்ட் மேம்பாலம் அருகில், கோட்டூர்புரம், ஏதேனும் ஒரு கடற்கரை பகுதி என மொத்தம் 7 இடங்களில் அம்மா வாரச் சந்தை திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு சந்தையிலும் 200 கடைகள் இடம்பெறும். ஒவ்வொரு கடைக்கும் 100 சதுர அடியில் இடம் ஒதுக்கப்படும். அங்கு மின் விளக்கு, மின் விசிறி வசதி செய்து கொடுக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 2 முதல் 5 ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு துறைகளுடன் பேச்சு
அங்கு பொருட்களை விற்பதற்காக விவசாயம், தோட்டக்கலை, கரும்பு வளர்ச்சி, பால் வளம், மீன்வளம், கால்நடை, பிற்படுத்தப்பட்டோர் நலம், பட்டு வளர்ச்சி ஆகிய துறைகள், தமிழ்நாடு மூலிகை மருந்து கழகம், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
1,256 பொருட்கள் கிடைக்கும்
மேற்கண்ட நிறுவனங்கள் மூலம் காய்கறி, பழம், மளிகைப் பொருள், அரிசி வகைகள் மற்றும் அவற்றில் இருந்து மதிப்பு கூட்டு முறையில் தயாரிக்கப்பட்ட அவல், பொரி, சோளம் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட சோளப் பொரி, சோள மாவு, சோள ரவை மற்றும் சமையல் பாத்திரங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, மீன்கள் என மொத்தம் 1,256 பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
சந்தைக்கு வருபவர்களை மகிழ்விக்கும் வகையில், அரசு கவின் கலை பல்கலைக்கழகம், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
விலை மலிவாக இருக்கும்
இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள் நேரடியாக பொருட் களை விற்பதால், அவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதுடன், மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். சோப், பேஸ்ட் போன்ற கம்பெனி உற்பத்தி பொருட்கள், பல கைகள் மாறாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால், அதிகபட்ச சில்லறை விலையைவிட மிகவும் குறைவான விலையில் விற்கப்படும்.
200 வார்டுக்கும் விரிவாக்கம்
இத்திட்டத்துக்கு பொதுமக் களிடம் கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில், மண்டலத்துக்கு ஒரு வாரச் சந்தை, அதைத் தொடர்ந்து வார்டுக்கு ஒரு வாரச் சந்தை என படிப்படியாக, மாநகரப் பகுதியில் உள்ள 200 வார்டுகளிலும் வாரச் சந்தைகள் திறக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சலுகை தருமா அரசு?
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் கூறியபோது, ‘‘அம்மா வாரச் சந்தை நல்ல திட்டம்தான். விவசாய விளை பொருட்களை அம்மா வாரச் சந்தைக்கு ஏற்றி வருவது, விவசாயிக்கான பேருந்து கட்டணம் ஆகியவற்றை அரசு இலவசமாக்க வேண்டும். அந்த விவசாயிகளுக்கு ஆட்சியர் அலுவலகங்கள் மூலமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.