தமிழகம்

கோயில் விழாக்களில் ஆடல்- பாடல் நிகழ்ச்சியில் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோயில் விழாக்களில் நடத்தப்படும் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளில் நிபந்தனைகள் மீறப்பட்டால், விழா அமைப்பாளர்கள் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம், சிவகிரி வட்டம், ராமநாதபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத பொங்கல் விழாவையொட்டி அக்டோபர் 12 மற்றும் 15 தேதிகளில் ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வாசுதேவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம். வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. 2 நாள்கள் ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, அக்டோபர் 12 அன்று இரவு 8 முதல் 11 மணி வரை ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில், ‘ஆடல்- பாடல் நிகழ்ச்சியை சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு பக்தி மார்க்கமாக நடத்த வேண்டும். நிகழ்ச்சியில் நடனமாடுவோர் உட்பட யாரும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் நடனமாடமாட்டார்கள் என உறுதியளித்து விழா அமைப்பாளர் காவல் ஆய்வாளரிடம் கடிதம் அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடைபெற போலீஸார் அனுமதிக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டம் உட்பட பிற சட்டங்கள் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆடல்- பாடல் நிகழ்ச்சி விதிமீறல் தொடர்பாக போலீஸார் சாதாரண பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் ஆடல்- பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் முற்றிலும் தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT