தமிழகம்

உலக முஸ்லிம்கள் கொண்டாடும் இரண்டாவது பெருநாள்: தியாகத்தைப் போற்றும் திருநாளே பக்ரீத் பண்டிகை

ஸதகத்துல்லாஹ் ஹஸனி

உலக முஸ்லிம்கள் கொண் டாடும் இரு பெருநாட்களில் இரண்டாவது பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் எனும் தியாகத் திருநாள். இறைத் தூதர் இப்ராஹிம் (அலை), இறைவனுக்காகத் தனது மகனார் இஸ்மாயிலை (அலை) உயிர்ப் பலி கொடுக்கத் துணிந்த தியாகத்தை உலகம் உணரச் செய்ய விரும்பிய இறைவனின் திட்டமே இந்த தியாகத் திருநாள். உயிர்ப் பலியின் சூழல், மிருக பலியாக மாற்றப்பட்டதால் உலக முஸ்லிம்கள் அனைவரும் இதனை தியாகத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். வசதிபடைத்த முஸ்லிம்கள், ஆடுகளை (குர்பானி) பலியிட்டு இறைவனின் பெயரால் நன்மையை நாடி அதனுடைய இறைச்சியை தாமும் உண்டு ஏழைகளுக்கும் வழங்குகிறார்கள்.

குர்பானி யார் மீது கடமை

பருவம் அடைந்த, சுய நினைவுள்ள, உள்ளூரில் தங்கியுள்ள, ஏழை வரி கடமையாகும் அளவு செல்வம் உள்ள முஸ்லிம் ஆண், பெண் அனைவருக்கும் குர்பானி கொடுப்பது கடமையாகும். சிலர் குர்பானியை ஹஜ் போன்று வாழ்க்கையில் ஒரே ஒருமுறை செய்யவேண்டிய கடமை என்று கருதுகிறார்கள். இது தவறு. ஜகாத் கடமையாகும் அளவு சொத்து உள்ள ஒவ்வொருவருக்கும் குர்பானி கடமையாகும்.

தனது வீட்டில் மனைவி, தாய், சகோதரி, மகள், தந்தை, சகோதரன், மகன், கணவர் அனைவரும் வசதி உள்ளவர்களாக இருந்தால், அனைவர் மீதும் குர்பானி கொடுப்பது கடமையாகும்.

யார் மீது குர்பானி கடமையாக இருக்கிறதோ, அவர் குர்பானி கொடுக்காவிட்டால், அவர் நமது தொழுகை மைதானத்துக்கு (ஈத்காஹ்) அருகில்கூட வரவேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

குர்பானியின் சட்டங்கள்

* குர்பானி கொடுப்பதற் காக வாங்கப்பட்ட பிராணியில் ஏதாவது குர்பானி கொடுக்கக்கூடாத ஊனம் ஏற்பட்டுவிட்டால், வேறு ஒன்று வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். அவர் ஏழையாக, குர்பானிக் கடமை இல்லாதவராக இருந்தால், அந்த குறையுள்ள பிராணியையே குர்பானி கொடுக்கலாம். - நூல்: துர்ருல் முக்தார்

* தனக்காக குர்பானி கொடுத்தால் தானும் சாப்பிடலாம்; மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். அதேபோலத்தான், இறந்தவருக்கு நன்மையை சேர்த்துவைக்கும் எண்ணத்தில் ஒருவர் குர்பானி கொடுக்கும்போதும், அந்த இறைச்சியை தானும் சாப்பிடலாம்; பிறருக்கும் வழங்கலாம். அதேநேரம், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தின் சார்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்திருந்து, அவரது சொத்தில் இருந்து குர்பானி கொடுக்கப்பட்டிருந்தால், அந்த பிராணியின் அனைத்து இறைச்சியையும், தான் சாப்பிடாமல், தர்மமாகக் கொடுத்துவிடுவது கடமையாகும். - நூல்: துர்ருல் முக்தார்

* வெளியூரில் உள்ள ஒருவருக்காக அவரது கட்டளை யின்றி குர்பானி கொடுத்தால் அது நிறைவேறாது. அதேபோல, அவரது அனுமதியின்றி கூட்டுக் குர்பானியில் பங்கு சேர்த்துக்கொண்டால் மற்ற பங்குதாரர்களின் குர்பானியும் நிறைவேறாது. இந்த சட்டம், கடமையான குர்பானி சம்பந்தமானது. - நூல்: ஆலம்கீரி

எப்போது குர்பானி கொடுப்பது?

ஜூன்துப் பின் சுஃப்யான் (ரலி) கூறியதாவது:

நான் ஈதுல் அள்ஹா அன்று (பெருநாள் தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து முடித்ததும் குர்பானி கொடுக்கப்பட்ட ஆடுகளைக் கண்டார்கள்.

அப்போது, ‘‘தொழுகைக்கு முன்பே குர்பானி பிராணியை அறுத்துவிட்டவர், அதற்குப் பதிலாக மற்றோர் ஆட்டை அறுக்கட்டும். (தொழுகை முடியும் வரை) அறுக்காமல் இருந்தவர், இப்போது (தொழுகை முடிந்த பிறகு) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கட்டும்’’ என்றார்கள். - நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (3960).

SCROLL FOR NEXT