‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவை சேர்ந்த இளம்பெண் எஸ்.ஸ்வேதா 18 மணி நேரம் இடைவிடாமல் விசிலடித்து பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ளார்.
சங்கரின் ‘சாதகப் பறவைகள்’ சார்பில் ‘விசில்’ என்ற தலைப்பில் 18 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இசைக் குழுவில் ஒருவரான எஸ்.ஸ்வேதா அதிகாலை 4.45 மணி முதல் இரவு சுமார் 11.30 மணி வரை 18 மணி நேரம் தொடர்ந்து உதடுகளைக் குவித்து 250-க்கும் மேற்பட்ட பாடல்களை விசிலடித்து பாடி சாதனை படைத்துள்ளார். கர்னாடக இசை மற்றும் பக்தி பாடல்கள், காலத்தால் அழியாத பழைய திரைப்படப் பாடல்கள், ஹிந்தி மற்றும் அன்ப்ளக் பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான் முதல் அனிருத் வரை, மேஸ்ட்ரோ இளையராஜா பாடல்கள், சேலஞ்ஜிங் பாடல்கள் என 6 பிரிவுகளாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இடையே ஆப்பிள், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் செல்போன்களில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவதற்கு வசதியாக ‘சாதகப் பறவைகள்’ ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வசந்த் அண்ட் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார், கானா பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக இசைக்குழு நிர்வாகி எஸ்.சங்கர் ராம் கூறியதாவது:
எங்களுடைய இசைக் குழுவில்இருக்கும் செல்வி எஸ்.ஸ்வேதா வுக்கு விசில் மூலமாக பாடல் பாடும் திறமை இருந்தது. அவருடைய திறமையை வெளியே கொண்டுவர நினைத்தோம். அதன்படி முதல்கட்டமாக 4 மணி நேரம், இரண்டாம் கட்டமாக 8 மணி நேரம், மூன்றாம் கட்டமாக 12 மணி நேரம் என விசில் சாதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தற்போது ‘விசில்’ என்ற தலைப்பில் 18 மணி நேரம் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் Asia Book of Records, India Book of Records, Tamil Nadu Book of Records என மூன்று சாதனைகளை படைக்க இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பதிவு செய்து, கின்னஸ் சாதனைக்கும் அனுப்ப இருக்கிறோம். இசை உலகில் யாரும் இதுவரை 18 மணி நேரம் விசிலடித்து பாடல் பாடியது இல்லை. இந்த சாதனையை செல்வி எஸ்.ஸ்வேதா படைத்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.