மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கை மறுவிசாரணை செய்யக்கோரி தாக்கலான மனுவுக்குப் பதிலளிக்க, சிபிஐ மற்றும் திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி, டிஎஸ்பி ராஜாராம் உள்பட 18 பேருக்கு நோட்டீஸ்அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை உத்தங்குடியில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் 2007 மே 9-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் ஊழியர்கள் வினோத்குமார், கோபிநாத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, டிஎஸ்பி ராஜாராம் உள்பட 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் 18 பேரையும் விடுதலை செய்து, மதுரை முதன்மை மாவட்ட அமர்வுநீதிமன்றம் கடந்த 2009 டிச. 9-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, சிபிஐ போலீஸார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, அது நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கை மறுவிசாரணை செய்யஉத்தரவிடக்கோரி, வினோத்குமாரின் தாயார் பூங்கொடி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கீழ் நீதிமன்றத்தில் விசாரணை முறையாக நடைபெறவில்லை. சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். இதனால் அப்போதிருந்த திமுக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. என் மகன் வினோத்குமாரின் எதிர்பாராத திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள சில ஆண்டுகள் ஆனது. நிதி நெருக்கடியும் இருந்தது. இதனால் தீர்ப்பு வந்து, குறிப்பிட்ட காலத்துக்குள் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. எனவே, வழக்கின் உத்தரவை மறு சீராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதற்கான தாமதத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. பூங்கொடியின் மனுவுக்கு பதிலளிக்க, சிபிஐ மற்றும் அட்டாக் பாண்டி, டிஎஸ்பி ராஜாராம் உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணை மார்ச் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.