கரூர்- ஈரோடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் படித்து வந்தார் சோனாலி. அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வெங்களூர் அருகில் உள்ள ஆதியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் உதயகுமாரும் சோனாலியும் நட்புடன் பழகி வந்ததாகக் கூறுகின்றனர் சக மாணவர்கள்.
போதிய வருகைப் பதிவு இல்லா ததால், கல்லூரி நிர்வாகம் பருவத் தேர்வை எழுத உதயகுமாரை அனுமதிக்கவில்லை. இதனால், தற்போது நடைபெற்று வரும் பருவத் தேர்வுக்கும் உதயகுமார் வரவில்லை. உதயகுமாரின் ஒழுங்கீன நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த சோனாலி, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
நன்றாகப் பேசி வந்த சோனாலி, சில நாட்களாகப் பேசாதது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கல்லூரிக்கு தேர்வு எழுத சோனாலி வந்திருப்பதை அறிந்த உதயகுமார், தனது கல்லூரி சீருடை யை அணிந்துகொண்டு கல்லூ ரிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்த சோனாலியிடம் கோபமாகப் பேசிவிட்டு, அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தால், வகுப்பறை யில் இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ்குமாரையும் தாக்கிவிட்டு உதயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனாலி மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வாக்குமூலம்
சோனாலியும் தானும் காதலித்து வந்ததாகவும், சோனாலி கடந்த சில நாட்களாகப் பேச மறுத்த தால் ஆத்திரத்தில் அவரைத் தாக்கி கொலை செய்யும் எண்ணத்தில் தான் கல்லூரிக்குச் சென்றதாக உதயகுமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.