மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நடத்திவரும் போராட்டம் இன்று முதல் தீவிரமடைகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகள் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதை அனுமதிக்க முடியாது என்று கடந்த 17-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந் தனர்.
50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் 6-வது நாளாக நேற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினரும் கல்லூரி வளாகத்தில் நேற்று உண்ணாவிரதத்தை தொடங் கினர்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட் டனர். இன்று முதல் அரசு டாக்டர்களின் போராட்டம் தீவிர மடைவதால் நோயாளிகள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் அரசு மருத்து வர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) நேற்று நடந்தது. மாநில செயலாளர் பி.சாமிநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட் டுள்ள முடிவுகள் பற்றி சங்கத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:
மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 3-ம் தேதி (இன்று) திட்ட மிடப்பட்ட அறுவை சிகிச்சைகள், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், நீதிமன்றப் பணிகள், விஐபி மருத்துவக் குழு, மாணவர்களுக்கான கற்பித்தல் வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப் படும்.
4-ம் தேதி அனைத்து வட்ட, மாவட்ட அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம் நடைபெறும். அவசரநிலை நோயா ளிகள் மட்டும் பார்க்கப்படுவர்.
5, 6-ம் தேதிகளில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழு மையாக அனைத்து டாக்டர்களும் தற்செயல் விடுப்பு எடுப்பார்கள். அனைத்து மாவட்டங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெறும். 8-ம் தேதி அனைத்து சுகாதாரத்துறை இயக்குநரகங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தவிர மற்ற பணிகள் நிறுத்தப்படும்.
இவ்வாறு டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறிய தாவது:
கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்று வரும் உண்ணாவிரதம் வரும் 4-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும். வரும் 5, 6-ம் தேதிகளில் அனைத்து அரசு டாக்டர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை வந்து மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும். 8-ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 10-ம் தேதி ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணியாற்றும் சுமார் 4 ஆயிரம் டாக்டர்கள் விடுப்பு எடுக்க உள்ளனர்.
இவ்வாறு டாக்டர் பி.பால கிருஷ்ணன் தெரிவித்தார்.