தமிழகம்

100 நாள் வேலை திட்டத்தில் விதைப்பந்து தயாரிக்கும் கிராம மக்கள்

கல்யாணசுந்தரம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (100 நாள் வேலை) கீழ் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

புவி வெப்பமயமாதலைத் தடுக்க பசுமைப் போர்வையை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வளர்க்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மரக் கன்றுகள் நடும் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளின் கரைகள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில், விதைப்பந்துகள் தயாரித்து அதை சாலை ஓரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வீசும்போது அவை தானாக முளைத்து மரங்களாக வளரும். கால்நடைகள் உண்ணாத வேம்பு, புங்கன் உள்ளிட்ட விதைகள் இவ்வாறு தூவப்படுகின்றன.

இந்த விதைப்பந்துகளை தயாரித்து கிராமத்தில் மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் முசிறி வட்டம் திண்ணக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை சிகரம் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு விதைப்பந்து தயாரிக்கும் பணியை 100 நாள் வேலைத் திட்ட மண்டல அலுவலர் வைரமணி அண்மையில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பசுமை சிகரம் அறக்கட்டளைத் தலைவர் யோகநாதன் ‘தி இந்து’ விடம் கூறியது:

விதைப் பந்துகளை பலரும் தயாரிக்கின்றனர். ஆனால், அவை முறையாக தயாரிக்கப்படவில்லையெனில் பயனில்லை. 2 கிலோ மண்ணுக்கு ஒரு லிட்டர் ஆறிய சாதம் வடித்த கஞ்சி, நன்கு மக்கிய குப்பை 5 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் தலா 100 கிராம் எடுத்துக் கொண்டு அனைத்தையும் நன்கு பிசைந்து மாவுபோல தயாரித்து, விதையை விட இரு மடங்கு அளவில் இந்த கலவையை எடுத்துக் கொண்டு அதில் விதையை வைத்து பந்து போல் உருட்டி, 2 நாட்களுக்கு நிழலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த விதைப்பந்துகளை மழை பெய்தவுடன் வீசினால், அவை ஏறத்தாழ 10 நாட்களுக்குள் முளைத்து விடும். அதன் பின் நிலத்தில் உள்ள ஈரத்தைக் கொண்டு வளரத் தொடங்கும்.

தற்போது இந்த விதைப் பந்து தயாரிக்கும் பணிக்கென 50,000 வேம்பு விதைகள், 11,000 புங்கன் விதைகள், 1,400 நாவல் விதைகள், 4,500 இலந்தை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எங்கள் கிராமத்தில் வீசியது போக மீதமுள்ள விதைப் பந்துகளை பிற கிராமங்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இந்த பணியை பசுமை சிகரம் அறக்கட்டளையின் செயலாளர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் தன்ராஜ், அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பாலாஜி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒருங்கிணைத்தனர்.

SCROLL FOR NEXT