காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக கோபுர கல சங்கள் அமைத்தல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்தன. பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் காஞ்சி நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி போக்குவரத்தில் மாற்றங் கள் செய்திருப்பதுடன், தொழிற்சாலைக ளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ரூ.35 கோடி செலவில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவை யொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை யொட்டி பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகராட்சி பேருந்து நிலையம் தவிர ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் ஆகிய இடங்களில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் முத்தியால்பேட்டை, களிய னூர், வையாவூர் வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை அடையலாம். சென்னை, பெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகளும் தாமால்வார் தெரு வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம். வந்தவாசி, செய்யார், உத்தரமேரூர் பேருந்துகள் காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும்.
ஆண்டர்ஸன் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம், மரிய ஆக்ஸிலியம் பள்ளி மைதானம், ஏகேபி சமூகக் கூடம், பழைய ரயில்வே நிலைய குடோன், அன்னை அஞ்சுகம் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் பொதுமக்கள் தெற்கு வாசல் வழியாக அனுமதிக்கப் படுவர். வடக்கு வாசல் வழியாக வெளி யேறலாம். ஒரு முறை வெளியேறிவிட்டால் மீண்டும் தெற்கு வாசல் வழியாகத்தான் உள்ளே வர வேண்டும். மேலும் 3 இடங் களில் மருத்துவ முகாம்கள், அன்ன தானம் ஆகியவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 100 போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 100 சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகள், ராஜவீதிகள், பேருந்து நிலையம் மற்றும் சங்கர மடம் அருகில் 10 இடங்களில் எல்இடி திரை மூலம் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்படும்.
ஒருங்கிணைப்பு அலுவலர்களாக வருவாய்த் துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவசர உதவிக்கு இரு தொலைபேசி எண்கள்: 044-27237107, 044-27237207. இந்த எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்தார். இறுதிக் கட்டப் பணிகளான கலசங்கள் பொருத்துதல், கொடிமரத்துக்கு தங்கத் தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடை பெற்றன. ஸகல தேவதா ஆவரண பூஜை, ஜபம், ஆவரண ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்டவரை நடைபெற்றன. இந்த பூஜையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பணி செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் நகரம் மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்தும் காஞ்சிபுரம் வழியாகவும் தனியார் நிறுவனப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
அந்நிறுவனங்களின் பேருந்துகள் குடமுழுக்கு விழாவையொட்டி நகரப் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இப் பேருந்துகள் நகரத்துக்கு வெளியே நின்று தங்கள் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயில் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பிரமுகர் கள், கோயிலுக்கு வரும் விஐபிக்கள் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அட்டை வழங்கப் பட்டுள் ளது. மக்கள் தெற்கு வாசல் பகுதி வழியாகச் செல்ல தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள், அன்னதானத்துக் கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருசில பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காஞ்சிபுரம் வந்துள்ளனர். இவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் மற்றும் சுகாதாரப் பணிகளை செய்யும் ஊழியர்கள் தங்குவதற்கும், குடமுழுக்கு விழாவை மாணவர்கள் காண்பதற்கும் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 15 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு அந்தந்த பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார். அதேபோல் ஆரம்ப பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மூலமும், தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மெட்ரிப் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் மூலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொது விடுமுறையாக அல்லாமல் நகராட்சிக்கு உட்பட்ட தேவைப்படும் பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.