தமிழகம்

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு கூடாது: ராமதாஸ்

செய்திப்பிரிவு

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா தற்கொலை செய்து செய்து கொண்டது, நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அவமதிப்புகளும், சீண்டல்களும் கண்டிக்கத்தக்கவை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்பதற்காக எத்தனை தடைகளை தாண்டி வரவேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், சமூக நிலையிலும், பொருளாதார நிலையில் அடித்தட்டில் உள்ள குடும்பத்தில் பிறந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் அளவுக்கு உயர்ந்தார் வெமுலா. சில அநீதிகளை தட்டிக்கேட்டார் என்பதற்காகவே சக மாணவர்களுடன் விடுதி மற்றும் நூலகத்திலிருந்து நீக்கப்பட்டு நவீன தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 7 மாதங்களாக அவருக்கு ஆய்வு உதவித்தொகையும் மறுக்கப்பட்டிருக்கிறது.

தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என்னென்ன, தாம் அடைந்த மன உளைச்சல் எத்தகையது? என்பதை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார். வெமுலாவின் தற்கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தான் சரியாக இருக்கும்.

இத்தகைய நிகழ்வுகள் இனியும் தொடராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகள் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் நிலவுகின்றன. எனவே, தோரட் குழு பரிந்துரைகளையோ அல்லது புதிதாக வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகளை பெற்றோ செயல்படுத்தி உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் சாதிய பாகுபாடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் வெமுலாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் கல்வி உதவித்தொகை திட்டத்தையும் அரசு தொடங்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT