திருச்சியில் இரு நாள்கள் நடைபெறவுள்ள திமுகவின் 10-வது மாநில மாநாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
திமுகவின் 10-வது மாநில மாநாடு திருச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.15,16) இரு நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்காக திருச்சி - திண்டுக்கல் சாலையில் தீரன்நகர் எதிரே 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்து, மாநாட்டு மேடை, பார்வையாளர்கள் அமரும் பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக்கு வரும் தொண்டர் களை வரவேற்கும் வகையில் டெல்லி செங்கோட்டை, அரண் மனைத் தோற்றம் உள்ளிட்ட வடிவமைப்புகளைக் கொண்ட மூன்று பிரம்மாண்டமான முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட பந்தல்
மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அமர்ந்து நிகழ்வுகளைக் காணும் வகையில் 600 அடி அகலம், 1100 அடி நீளத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்படவுள்ளன. இந்த பந்தலின் மேற்கூரை மற்றும் இரு பக்கங்களிலும் அரண்மனைகளில் உள்ளது போன்ற வண்ணத் துணிகள் மற்றும் காகிதப் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
கான்கிரீட் தளத்தில் மேடை
மாநாட்டுக்கென 200 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான மேடை கான்கிரீட் தளத்தில் நாடாளுமன்ற கூட்டரங்குபோல அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர திமுக தலைவர் மு. கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்குவதற்கு மேடையின் பின்புறத்திலேயே தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய குடில்கள் கட்டப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் மேடை யிலேயே சிறப்பு வசதிகளுடன் கூடிய ஓய்வறைகளும் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார்.