சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர், சிபிசிஐடி போலீ ஸார் விசாரணையில் குற்றப்பத் திரிகையில் இருந்து பெயர் நீக்கப்பட்ட தந்தை முத்துப்பாண்டி மர்மமான முறையில் நேற்று இறந்தார்.
சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி சிறுமியின் அத்தை தாமரைசெல்வி புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக் ஆகியோரை ஜூன் 5-ம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இவ்வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் சிவகங்கை நகர் உதவி ஆய்வாளர் சங்கர், அரசுப் பேருந்து நடத்துநர் நமச்சிவாயம் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடியில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட இரண்டாவது வாக்குமூலத்தின்படி சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, கார்த்திக் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் திருப்பமாக சிறுமியின் அத்தை தாமரைசெல்வி, அவரது 16 வயது மகன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிவகங்கை கம்பர் தெருவில் உள்ள வீட்டில் முத்துப்பாண்டி(48) நேற்று முன்தினம் இரவு மயங்கிக் கிடந்தார். அவரது தந்தை பாலுச்சாமி முத்துப்பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துப்பாண்டி மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.