தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்குமேல் மூடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை அசோக் நகரில் வியாழக்கிழமை நடந்தது.
அப்போது நிருபர்களிடம் திருமாவளவன் கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக எல்லா தொகுதிகளிலும் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளன. ஆர்.கே.நகர், திருவாரூர், கொளத்தூர் என தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா பெரிய அளவில் நடந்துள்ளது.
திமுகவும், அதிமுகவும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை. வாக்குக்கு பணம் கொடுத்து மக்கள் மீது ஊழல் கறையை அக்கட்சிகள் பூசியுள்ளன. பணநாயகம்தான் வென்றுள்ளது. இந்த முறைகேடுகள் எதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.
எங்கள் அணி வாக்குக்காக பணம் கொடுக்கவில்லை. எனினும், எங்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. எங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது. எங்களுடைய முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், எங்கள் நோக்கம் நல்லது. எனவே, இந்த தோல்வி எங்கள் அணியை எந்த விதத்திலும் பாதிக்காது. நாங்கள் வெற்றியை நோக்கி வேகமாக பயணிப்போம்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கும் அவரது அரசுக்கும் விசிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். விற்பனை குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளை காலை 10 முதல் 12 மணிவரை மூடுவதற்கு பதிலாக மாலை 5 மணிக்குமேல் முழுமையாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் ரத்து செய்ய வேண்டும்" என்றார் திருமாவளவன்.