தமிழகம்

புதுக்கோட்டை - ஆதனக்கோட்டையில் தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆ.மணிகன்டன், கடந்த 2014-ல், கூழையான்விடுதியில் ஒரு மைல் கல்லைக் கண்டுபிடித்தார். அதில், ஆதனக்கோட்டை 6 மைல் என்றும், புதுக்கோட்டை 9 மைல் என்றும் தமிழ் மற்றும் ரோம எண்களில் எழுதப்பட்டிருந்தது. இதேபோல, அன்னவாசலிலும் மைல் கல் கண்டுபிடிக்கப்பட்டது.

2014-ல் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பு வகித்த நா.அருள்முருகன், தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல்லை மேட்டுப்பட்டியில் கண்டுபிடித்தார். தற்போது, மேலும் ஒரு மைல் கல் ஆதனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மைல் கற்களின் மூலம், 18-ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை ஆட்சி நிர்வாகம், தமிழ் எண்களையும், ரோம எண்களையும் பயன்படுத்தியதை அறியமுடிகிறது என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஆ.மணிகண்டன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கூழையான்விடுதி, அன்னவாசல், மேட்டுப்பட்டியில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டதைப்போல, தற்போது ஆதனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லிலும் ‘புதுக்கோட்டை 14 மைல் என்றும், ஆதனக்கோட்டை 1 மைல்’ என்றும் தமிழ் மற்றும் ரோம எண்களால் எழுதப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் மாப்பிளைநாயக்கன்பட்டி மற்றும் செங்கிப்பட்டியில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 2 மைல் கற்களில் தமிழ் எண்கள் உள்ளன. இதேபோல, தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலிலும் ஒரு மைல் கல் உள்ளது.

இதன் மூலம் கடந்த 18-ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் தமிழ் எண்களும், ரோம எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும், தஞ்சை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் தமிழ் மற்றும் அரபு எண்களைப் பயன்படுத்தியதையும் அறியமுடிகிறது.

மேலும், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அருள்முருகன், புதுக்கோட்டையிலிருந்து கூழையான்விடுதி வரை செல்லும் சாலை, 18-ம் நூற்றாண்டில் மேட்டுப்பட்டி வழியாகச் சென்றுள்ளதை ஆய்வுமூலம் கண்டறிந்துள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT