நடிகர் அருண் விஜய்யை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேன் மீது, நடிகர் அருண் விஜய் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியது. இதில் போலீஸ் வேனின் இடது பக்கவாட்டு பகுதி லேசாக சேதம் அடைந்தது. கடந்த 26-ம் தேதி இரவு நடந்த இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
விசாரணையில், அருண் விஜய் மது அருந்திவிட்டு போதையில் காரை ஓட்டியது தெரிந்தது. அவர் மீது பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது காரை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது, ‘‘அருண் விஜய் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
தலைமறைவாகி விட்டார் என்று செய்திகள் வெளியாகின்றன. இதில் எதிலுமே உண்மை இல்லை. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டிருந்தால் அருண் விஜயை கைது செய்யலாம். ஆனால் அப்படி எதுவுமே இல்லை.
சேதமடைந்த வேனை அவர்களே சரிசெய்து தருவதாக கூறிவிட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டியதற்கும், விபத்தை ஏற்படுத்தியதற்கும் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்” என்றார்.