தமிழகம்

பட்ஜெட் மரபுவழி சடங்காக நிறைவேறியுள்ளது: முத்தரசன்

செய்திப்பிரிவு

நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல் என்ற மரபுவழி சடங்கு நிறைவேறியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பட்ஜெட் குறித்து கருத்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் 2017-18 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் புதிய நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியால் பாசனப்பரப்பு வறண்டு குடிநீர் பஞ்சம் உருவாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்களின் வாழ்வுப் பாதுகாப்புக்கான வேலைவாய்ப்பு, குடி தண்ணீர், உணவு,மருத்துவம், சுகாதாரம் போன்ற திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

வர்தா புயலும், வரலாறு காணாத வறட்சியும் ஏற்படுத்திய பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசிடம் முறையே ரூ 22,573, ரூ 39,565 கோடி என ரூ 62,138 கோடி எதிர்பார்க்கும் தமிழ்நாடு அரசு, வரும் நிதியாண்டில் மத்திய அரசிடம் ரூ 41,454 கோடி மானியமாக கிடைக்கும் என நம்புகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காமலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்காமலும் வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அமையவில்லை.

வறட்சியால் தற்கொலை செய்தும், அதிர்ச்சியுற்றும் மரணமடைந்த விவசாயிகள் குடும்பங்களுக்கும், வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் வறட்சி நிவாரணம் அளிக்கவும் நிதிநிலை முன்வரவில்லை.

விவசாயிகள் பயிர் சாகுபடிக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கியுள்ள நகை அடகு கடன்கள், பத்திரயீட்டு கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ள ரூ 7 ஆயிரம் கோடி கடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பது எப்படி சாத்தியம் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

நடப்பு நிதியாண்டு முடிவடைந்து, அடுத்த நிதியாண்டு தொடங்கும் நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்கள் 100 லிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது. உயர்த்தப்பட்ட வேலை நாட்களை நடைமுறையில் வழங்கிட வரும் நிதியாண்டில் இணைத்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தில் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்து ரூ 3,14,366 கோடியாக உயர்ந்துள்ளது. இத்துடன் வரும் நிதியாண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ 15,930 கோடியும் சேர்ந்துள்ள நிலையில், கடன்வாங்கும் வரம்பை மீறி அதிகக் கடன் வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். சுமார் 10 லட்சம் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதை மறுக்க முடியாத நிதிநிலை அறிக்கை, அவர்களை பட்டினியில் இருந்து பாதுகாக்க தவறியுள்ளது.

தனியார், அரசு மற்றும் பொதுத் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களின் ஊதியத்திற்கு சமமான ஊதியம் வழங்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை.

அமைப்புசாராத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் நலத்திட்ட உதவிநிதி உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல் என்ற மரபுவழி சடங்கு நிறைவேறியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே தீர்வுக்கிடைக்கும் என்பதை நிதிநிலை அறிக்கை உணர்த்தியுள்ளது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT