தமிழகம்

கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமல்

செய்திப்பிரிவு

அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியால் அதிமுக-வில் குழப்பமான நிலை காணப்பட்டது. பொதுச்செயலாளர் சசிகலா அணியில் இருந்து எம்எல்ஏ-க்கள், எம்பி.க்கள், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 10 ஆகவும், எம்பிக்கள் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனால் சசிகலா அணிக்கு யார் தலைமை வகிப்பது என்ற கேள்வி எழுந்தது.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த புதன்கிழமை முதல் 7 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சசிகலா தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். மேலும், கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டார்.

இந்த சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT