தமிழகம்

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை: மேயர் சைதை துரைசாமி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கிக் கிடந்ததற்கு காரணம் இயல்புக்கு அதிக பெய்த மழைதான் என்று மேயர் சைதை துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் ஒரே நாளில் 16 செ.மீ. மழை பெய்ததால் மாநகரமே ஸ்தம்பித்தது. இம்மழைக்கு 33 இடங்களில் மரங்கள் விழுந்தன. 284 இடங்களில் மழைநீர் தேங்கின. 12 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கின. மழை நீர் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள் காரண மாக மழை நீர் வழிந்தோட முடியாமல், வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதை சமாளிக்க மாநகராட்சி ஊழியர்கள் திணறினர். 25 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 7 மழை நீரை உறிஞ்சும் லாரிகளை மட்டுமே கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.

விடுமுறையின்றி பணியாற்றும் ஊழியர்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் மழை தொடர்ந்ததால், மாநகராட்சி ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்றி, பொதுமக் களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையில் விழுந்த மரங்களை வெட்டியும், தேங்கும் நீரை அகற்றியும் வருகின்றனர்.

இது குறித்து மாநகர மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

அதிக மழையே காரணம்

சென்னை மாநகர வரலாற்றில் இதுபோன்று மழை பெய்ததில்லை. மாநகராட்சி நிர்வாகம் இயல்பான மழைக்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 16 செ.மீ. மழை என்பது மிக மிக அதிகமான மழைப் பொழிவு. இதை எதிர்கொள்வது எளிதல்ல. பிரச்சினையை படிப்படி யாகத்தான் சரி செய்ய முடியும்.

பூங்கா ரயில் நிலையம் அருகிலும், எழும்பூர் கெங்கு ரெட்டித் தெருவிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அங்குள்ள சுரங்கப் பாதையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது. இதையும் அகற்றியிருக்கிறோம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT