சந்திர கிரகணத்தின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களின் நடைகள் நேற்று சாத்தப்பட்டன.
இந்த ஆண்டின் 2-வது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் நேற்று நடந்தது. இதில், மாலை 4:24 மணிமுதல் 4:54 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கிரகண நேரத்தில், கோயில்களில் உள்ள மூலவர் சுவாமிக்கு தோஷம் ஏற்படும் என்பது ஐதீகம். இதனால், சந்திர கிரகணம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய கோயில்களான காஞ்சி காமாட்சி, ஏகாம்பரநாதர், திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆகிய முக்கிய கோயில்களின் நடைகள் சாத்தப்பட்டன. கோயில் நடைகள் மதியம் 12 மணியளவில் சாத்தப்பட்டு, பின்னர் மாலை 7 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்த பின், மீண்டும் திறக்கப்பட்டன. நடைகள் திறக்கப்பட்ட பிறகு கோயில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகங்கள் தண்ணீரால் கழுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வேள்வியின்போது அக்னியில் பிறந்தவர் என்ற ஐதீகம் உள்ளதால், வரதராஜ பெருமாள் கோயில் நடை சாத்தப்படவில்லை. இதனால் அந்த கோயிலில் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.