டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா திங்கட்கிழமை மாலை நேரில் வந்து ஆதரவளித்துள்ளார். அப்போது அவர், விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
இது குறித்து ஜந்தர் மந்தரில் பேசிய நக்மா கூறியதாவது: ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்தது போல் இப்போதைய பிரதமரும் செய்ய வேண்டும். இதை மாநிலங்கள் செய்ய வேண்டும் என அவர் காத்திருக்கக் கூடாது. இந்த விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. பசு பாதுகாப்பு, இறைச்சிகூடங்கள் மீது காட்டும் நடவடிக்கைகளை விடுத்து அதை விவசாயிகள் மீது காட்ட வேண்டும்.
உ.பி.யின் இறைச்சிக் கூடங்கள் மீதான நடவடிக்கைகளால் அம் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். உ.பி. விவசாயிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த கடன் தள்ளுபடியும் போதாது'' எனத் தெரிவித்தார்.
டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் இன்று, 28-ம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் 31-ல் நேரில் வந்து ஆதரவளித்திருந்தார். நக்மாவுடன் மகளிர் காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஜான்சி ராணி உட்பட அக்கட்சியின் நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து வந்து டெல்லியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஜாகீர் உசைன் மருத்துவக்கல்லூரியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை ஊர்வலம் விவசாயிகளுக்காக நடத்தி இருந்தனர்