சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'சவாரியா' என்ற படத்தின் நாயகி என்று சொன்னால் தமிழில் பலருக்குத் தெரியாது. இந்தி நடிகர் அனில் கபூரின் பெண் என்று சொன்னாலும் பலருக்குப் புரியாமல் போகலாம். ராஞ்சனாவில் தனுஷின் ஜோடியாக நடித்தவர் என்று சொல்லிப்பாருங்கள். சட்டென்று முகம் பிரகாசமடையும். ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதி இங்கே வெற்றி அடையாமல் போயிருக்கலாம். ஆனால் அது பாலிவுட்டின் பேரழகிகளில் ஒருவரைத் தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது.
அறிமுகமாகி ஐந்தே ஆண்டுகள் ஆன நிலையில், சோனம் நடித்த படங்களின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால், ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளின் பட்டியலில் சோனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ‘ராஞ்சனா’ வெளியான சமயத்தில் “தனுஷை ஒரு அப்பாவி இளைஞன்!” என்று வர்ணித்த சோனம், நடந்து முடிந்த 15ஆவது திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய பேச்சுக்கு இடைவிடாத கரகோஷம்! “ஒவ்வொரு திரைப்படமும் இயக்குநர்களை முன் வைத்தே உருவாகிறது.
நான் இயக்குநர்களை முன்வைத்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன். எப்போதுமே நடிகர்களை வைத்து திரைப்படம் இல்லை. இயக்குநர்களிடம் கதையைக் கேட்டு மட்டுமே படங்களைத் தேர்வு செய்கிறேன். அவர்கள்தான் ஒரு நல்ல படம் உருவாக காரணமானவர்கள்” என்று மாஸ் ஹீரோக்கள் பலரும் திரண்டிருந்த அந்த அரங்கில் பேசும் துணிச்சல் 28 வயதில் எப்படி என்று ஆச்சரியம் எழலாம். ஆனால் அந்தத் தெளிவும் துணிச்சலும்தான் சோனம்.
பேச்சிலும் நடிப்பிலும் மட்டுமல்ல. கவர்ச்சியிலும் கலக்குகிறார் சோனம். திரையிலும் ஃபேஷன் பத்திரிகைகளின் அட்டைப் படங்களிலும் இவரது கவர்ச்சியான தோற்றம் இவருக்கு ஏராளமான இளம் ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இன்று பாலிவுட்டின் பல நடிகைகள் ஆடை அலங்கார அணிவகுப்புகளில் பங்கேற்கிறார்கள்.
பிராண்டையோ புதிய மாடல்கள், டிசைன்களையோ பிரபலப்படுத்துவதற்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோக்களில் சோனம் ஒரு முக்கியமான நட்சத்திரம். ஒரு மணிநேரம் பூனை நடை பயில சோனம் வாங்கும் தொகைதான் அதிகமாம். ஒரு அணிவகுப்புக்கு 10 லட்சம் வாங்குகிறாராம். ஆனால் சேவை நோக்கத்துக்காகத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆடை அணிவகுப்புகளில் பங்கேற்கப் பணம் வாங்குவதில்லையாம்.
பத்திரிகைகளில் சோனம் கபூர் பற்றிய செய்திகள் தினமும் இடம் பெறுவது கட்டாயமாகிவிட்டாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஊடகங்களிடம் பேசுவதை லாவகமாகத் தவிர்த்துவிடுவது இந்த அழகு இளவரசியைத் தனித்து அடையாளம் காட்டுகிறது.