இதய ரத்தக்குழாய் அடைப்பை, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் குழாய் உள்ளே சென்று புகைப் படம் எடுப்பதன் மூலமாக துல்லியமாக கண்டுபிடிக்கலாம் என்று அப்பல்லோ மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு வருகிறது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் ரத்தக் குழாய் அடைப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. அதன்பின், ரத்தக் குழாய் அடைப்பை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் பொருத்துதல் போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பமான ரத்த அழுத்த (எப்எப்ஆர்) மற்றும் ரத்தக்குழாயின் உள்ளே சென்று புகைப்படம் எடுத்தல் (ஒசிடி) போன்ற பரிசோதனைகளின் மூலம் ரத்தக்குழாயில் எந்த அளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
எப்எப்ஆர் பரிசோதனை மூலம் கை அல்லது கால் நரம்பில் சிறிய அளவில் துளையிட்டு கருவியை உள்ளே செலுத்தி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும் பகுதியின் ரத்த அழுத்தம் கண்டறியப்படும். அதே போல நரம்பு வழியாக சிறிய அளவிலான கேமராவை உள்ளே செலுத்தி ரத்தக்குழாயின் உள்ளே சென்று எந்த அளவுக்கு அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை புகைப்படம் எடுக்கலாம்.
ரத்தக்குழாய் அடைப்பு குறைவாக இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் பொருத்துதல் தேவையில்லை. மருந்து மூலமாகவே குணப் படுத்திவிடலாம். இந்த புது முறையில் ரத்தக் குழாயின் உள்ளே சென்று படம் எடுத்த போது, அடைப்புகள் பல்வேறு நிலைகளில் இருப்பது கண்டுபிடித்தேன். மேலும் அடைப்புகளுக்குள் சிறிய துளைகள் ஏற்பட்டு ரத்தம் அதன்வழியாக சென்று கொண்டு இருப்பது தெரியவந் தது. நான் கண்டுபிடித்த, இந்த தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல இதய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செங்கோட்டுவேலு தெரிவித்தார்.