தமிழகம்

தலைமைச் செயலக வளாகத்தில் சார்பு செயலர் திடீர் மரணம்: ஊழியர்கள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

தலைமைச் செயலக வளாகத்தில் சார்பு செயலர் ஒருவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் கணேசன்(56). தலைமைச் செயலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் சார்பு செயலராக பணியாற்றி வந்தார்.

நேற்று பிற்பகல், மதிய உணவுக்குப் பின், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்துக்கு எதிரில் உள்ள ஓட்டல்கள் அமைந்திருக்கும் பகுதிக்கு நண்பருடன் சென்றார்.

அங்கு பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் கீழ் தளத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக இறந்ததாக அலுவலக தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக, கணேசனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடலை பெற்றுச் சென்றனர். கணேசனுக்கு, பச்சையம்மாள் (35) என்ற மனைவியும், காவ்யா (6) என்ற மகளும் உள்ளனர். தலைமைச் செயலக வளாகத்தில் சார்பு செயலர் ஒருவர் திடீரென மரணமடைந்தது, ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT