ரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜ கோபுரம் அருகே அமைக்கப் பட்ட பெரியார் சிலை கடந்த 2006-ம் ஆண்டு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 8 பேர் மீது ரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி குற்றவியல் தலைமை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு முறையாக ஆஜராகாததால், அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அர்ஜுன் சம்பத், செந்தில், சுஜித் ஆகிய 3 பேர் நேற்று நீதிபதி கருணாநிதி முன் னிலையில் ஆஜராகினர். அதன்பின், இவ்வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே அர்ஜுன் சம்பத் செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஜல்லிக் கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி தவறாகக் கூறி வருகிறார். இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்” என்றார்.