தமிழகம்

அமைதியாகக் காணப்படும் கோடநாடு எஸ்டேட்

செய்திப்பிரிவு

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியான பிறகும் எவ்வித பரபரப்பு இல்லாமல் கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் அன்றாட பணியில் வழக்கம் போல் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பறிமுதல் நடவடிக்கைகள் நேற்று வரை தொடங்கப்படவில்லை. இந்த எஸ்டேட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீர்ப்பின் எதிரொலியாக எஸ்டேட்டில் எவ்வித பரபரப்பும் காணப்படவில்லை.

தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் அன்றாடப் பணியை மேற்கொண்டனர். ஆனால், தொழிலாளர்கள் யாருடனும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்கள் வெளியாட்களுடன் கருத்து பரிமாறிக் கொள்ளக் கூடாது என எஸ்டேட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்டேட் மேலாளர் மற்றும் நிர்வாகிகள் கடந்த 25 நாட்களாக சென்னையில் தங்கி, எஸ்டேட் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக பெயர் வெளியிட விரும்பாத பெண் தொழிலாளர் தெரிவித்தார். மக்கள் நடமாட்டம் இல்லாமல் எஸ்டேட் பகுதி இரு நாட்களாக வெறிச்சோடியே காணப்பட்டது.

அதிமுக நிர்வாகி ஸ்டீபன் கூறும்போது, ‘கோடநாடு பகுதியில் எப்போதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்து சென்று கொண்டிருப்பர். எப்போதும் கூட்டம் இருந்து வந்த நிலையில், தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக காட்சியளிக்கிறது’ என்றார்.

ஒரு சிலர் மட்டுமே கோடநாடு காட்சிமுனைக்கு சென்று வந்தனர்.

SCROLL FOR NEXT