தமிழகம்

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி மையம் 2 மாதங்களில் செயல்படும்: ரூ.5.25 ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்சிசி) 2 மாதங்களில் ஆராய்ச்சி மையம் செயல்படத் தொடங்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி தெரிவித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி – ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம் அமைக்க, ரூ.5.25 கோடி நிதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஒதுக்கியது. அதன்படி முதல் கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வரும் டிசம்பர் மாதம் ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளரும், கல்லீரல் துறை தலைவரும், ஆராய்ச்சி மையத்தலைவருமான டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:

ஐசிஎம்ஆர் வழங்க உள்ள ரூ.5.25 கோடியில், ரூ.25 லட்சத்தில் ஆராய்ச்சிக்கான கட்டிடங்கள் புனரமைக்கப்பட உள்ளன. மீதமுள்ள ரூ.5 கோடியில் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ரூ.1 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடியை ஐசிஎம்ஆர் வழங்குகிறது. இந்த ஆராய்ச்சி மையத்துக்கு 2 விஞ்ஞானிகள், 2 டெக்னீஷியன்கள், டேட்டா எண்ட்ரி பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இன்னும் 2மாதத்தில் ஆராய்ச்சி தொடங்கப்படும்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் சர்க்கரை நோய், கொழுப்பு சம்பந்தமான நோய்கள், புற்றுநோய்கள் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் நோய்களுக்கு நவீன மற்றும் புதிய சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT