தமிழகம்

உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் உருது, அரபி மொழிகள் புறக்கணிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

செய்திப்பிரிவு

உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் உருது மற்றும் அரபிக்கான தேர்வுகள் சேர்க்கப்படாதது கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு சார்பில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 23.04.2017 அன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தும் இந்தத் தேர்வில் மொத்தம் 25 பாடங்களுக்கான உதவி பேராசிரியர்களைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 25 பாடப் பிரிவுகளில் சிறுபான்மையின மொழிகளான ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிறுபான்மையின மொழிகளாக உருது மற்றும் அரபி மொழிகளுக்கான தேர்வு விடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உருது, அரபி உட்பட சிறுபான்மையின மொழி துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஓய்வு, பதவி உயர்வு போன்ற காரணங்களால் காலியான பணியிடங்களை தமிழக அரசின் உயர்கல்வித் துறை இதுவரை நிரப்பாமல் உள்ளது. இச்சூழலில் மேற்படி அறிவிப்பில் உருது மற்றும் அரபிக்கான தேர்வுகள் சேர்க்கப்படாதது கண்டனத்திற்குரியது.

தமிழக உயர்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை சிறுபான்மையின முஸ்லிம் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோன்ற நிலை தொடர்ந்தால் தமிழக கல்லூரிகளில் உருது மற்றும் அரபித் துறைகள் நிரந்தரமாக மூடும் அபாயம் உள்ளது.

எனவே, அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பில் உருது மற்றும் அரபி மொழிகளையும் இணைத்து திருத்திய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT