மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் யாரோ திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் பேருந்து சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலையில் மீட்கப்பட்டது.
சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
ராஜபாளையம் பணிமனைக்கு உட்பட்ட TN 67 N 0680 என்ற எண் கொண்ட பேருந்து ஒன்று ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிறுத்தியுள்ளனர்.
காலை 4.30 மணிக்கு பேருந்தை நிறுத்திய இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு அப்பேருந்து இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் தங்கமாரிமுத்துவும், நடத்துனர் பாண்டித்துரையும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வண்டி எண்ணையும் வண்டியின் அடையாளத்தையும் கொடுத்து அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார் படுத்தினர். பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள திருமாஞ்சோலை எனும் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை போலீஸார் மீட்டனர்.
பேருந்தில் டீசல் அப்படியே இருந்ததால் டீசல் திருட்டுக்காக பேருந்து திருடப்படவில்லை என போலீஸார் முடிவு செய்துள்ளனர். பேருந்தில் இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்துள்ள போலீஸார் தொடர்ந்து பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.