திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் தாளையடி பச்சேரி கமிட்டி அரிசன தொடக்கப்பள்ளியை அரசு கையக்கப்படுத்த வேண்டும் என்ற இப்பகுதி தலித்களின் 16 ஆண்டுகால கோரிக்கை நிலுவை குறித்து, கடந்த 2013 டிசம்பர் 12-ம் தேதி `தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன் எதிரொலியாக தலித் மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேறியிருக்கிறது. இப்பள்ளியை அரசு கையகப்படுத்தி தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அரிகேசவநல்லூர் ஊராட்சியில் இந்த பள்ளிக்கூடம் 1939-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் இப்பள்ளி இன்றளவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மற்றும் பிற சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தொடக்கத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் கல்வி பயின்றனர். ஆனால் பள்ளிக்கு வெளியே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பள்ளியிலும் எதிரொலித்தது.
கடந்த 1997-98-ம் ஆண்டுகளில் இப்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கடந்த 22.10.1999-ம் தேதி பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து இப்பகுதியில் இருந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 200 பேர் தங்கள் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு மூலச்சி, ராமையன்பட்டி, முக்கூடல், வெள்ளங்குழி உள்ளிட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் அச்சமூகத்திலிருந்து இப்பள்ளிக்கு கல்வி பயில வந்த 58 மாணவர், மாணவியரும் பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழை வாங்கிச் சென்றுவிட்டனர்.
இப்பகுதியில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பயமின்றி வாழமுடியாத சூழல் உருவானதாலும், மக்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாலும், பள்ளியை ஆதிதிராவிடர் மக்களால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 1.12.1999-ம் தேதி கூடிய பள்ளி நிர்வாகக் குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பள்ளியின் அசையும், அசையா சொத்துக்கள், தளவாட சாமான்கள், பள்ளியின் பதிவேடுகள் என்று அனைத்தையும் அரசுக்கு எழுதிக்கொடுக்க அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு குறித்து அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு, உரிய விண்ணப்பமும் செய்யப்பட்டது.
பள்ளி கட்டிடம், நிலம் ஆகியவற்றை ஆளுநருக்கு எழுதி கொடுத்த பத்திரங்கள், பொதுப்பணித்துறை பொறியாளரின் கட்டிட உறுதிச் சான்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பரிந்துரைகள் என்று பல்வேறு கடிதங்களும், ஆவணங்களும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டில் இதே இடத்தில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாகவே ஊரை காலி செய்துவிட்டனர். இப் பள்ளியில் பிற சமுதாயத்தைச் சேர்ந்த 35 மாணவர், மாணவியர் மட்டுமே கல்வி பயில்கிறார்கள். ஒரு தலைமையாசிரியரும், ஓர் இடைநிலை ஆசிரியரும் பணியில் உள்ளனர்.
இப்பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கடந்த 16 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அப்போதைய செயலாளர் இ.சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவந்தனர்
இந்நிலையில் 10.12.2015-ம் தேதி இப்பள்ளியை கையகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் த.சபிதா வெளியிட்டுள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:
இப்பள்ளியில் 84 பிள்ளைகளுக்கு போதுமான இடவசதி, குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, கழிப்பிட வசதி மற்றும் போதுமான கல்வி உபகரணங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் எந்த பள்ளியும் இல்லை. இதனால் இப்பள்ளியை வேறு எந்த பள்ளியுடனும் இணைக்க வாய்ப்பில்லை, இங்கு பயிலும் குழந்தைகளின் கல்வி நலன் கருதி இப்பள்ளியை அரசு பள்ளியாக ஏற்பளித்தும், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை அரசுப்பணிக்கு உட்படுத்தியும் அரசு ஆணையிடுகிறது என்பவை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.