கடன் தருவதாக கூறி சிலர், பொதுமக்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தை ஏமாற்றி இருப்பதாக வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
சிட்லபாக்கத்தை சேர்ந்த வாசகர் ஒருவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தெரிவித்ததாவது:
கடந்த மாதம் சென்னை கே.கே.நகர் சிட்டி வங்கியில் இருந்து பேசு வதாக சில பெண்கள் தொலைபேசி மூலம் பேசி ரூ.3 லட்சம் வரை கடன் தருவதாகக் கூறினர். 3 லட்சத்துக்கு 5 சதவீதம் கமிஷன் கொடுத்தால் உடனே கடன் கிடைக்கும் எனக் கூறினார். இதனையடுத்து ரூ.15 ஆயிரம் பணத்தை வங்கியின் பிரதிநிதியான ராஜ்குமார் என்பவ ரிடம் கொடுத்தோம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கடன் கிடைத்துவிடும் என கூறிச் சென்றவர் திரும்பி வரவில்லை. சில நாட்கள் கழித்து போனில் தொடர்பு கொண்டபோது அனைத்து நம்பர்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. சில நாட்கள் கழித்து ராஜ்குமார் என்பவர் தொடர்பு கிடைத்தது. அவர், “உங்களைப் போல் நானும் ஏமாற்றப்பட்டுள்ளேன்” என்றார்.
இது தொடர்பாக ராஜ்குமாரை கேட்டபோது, “நான் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கியில் வேலை எனக் கூறி இன்டர்வியூ நடத்தப்பட்டது. நாங்களும் உண்மை என நம்பி ஏமாந் தோம். இதுவரை 3 கோடிக்கு மேல் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை கே.கே.நகர் காவல் நிலையம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டபோது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருவதாக கூறினர்.