தான் நிகழ்த்தியிருக்கும் சாதனையின் சாயல் கொஞ்சமும் தெரியாமல், முகத்தில் புன்னகை தவழ அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான் முகமது அனாஸ். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப் பந்து போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறான்.
சேலத்தைச் சேர்ந்த நிசார் அகமது - ஆசிஃபா தம்பதியின் செல்லப் பிள்ளை முகமது அனாஸ். பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றிப் பிறந்த இவனுக்கு இப்போது வயது 12. சேலம் சூரமங்கலம் ஆதர்ஷ் தாய் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்துக் கொண்டிருக் கிறான். நம்மைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே வணக்கம் வைத்தான். அதுமட்டும் தான் அவனுக்குத் தெரியும். மற்றதை அருகில் இருந்த அவனது அம்மா ஆசிஃபாதான் நமக்குச் சொன்னார்.
“மனவளர்ச்சி போதலைனு டாக்டர்கள் சொன்னாலும், நாங்கள் இவனை இறைவனின் அருட்கொடையாகத்தான் நினைச் சோம். எப்போதும் சிரிச்ச முகமாய் இருக்கும் இவனைப் பிரிந்து எங்களால் துளி நிமிடம்கூட இருக்க முடியாது. ரொம்ப கவனமா வளர்த் தோம். அதனாலேயே இவனுக்கு இருந்த குறை ஓரளவுக்குக் குறைஞ்சது. முன்பு எது சொன்னாலும் சட்டை செய்யாமல் இருந்த அனாஸ் கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் சொல்வதையும் செய்வதையும் கூர்ந்து கவனித்து அதன்படி நடக்க ஆரம்பிச்சான்.
‘புள்ள மேல பாசம் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வைச்சிருக்கக் கூடாது. இப்புடி இருக்கிற புள்ளைய சகஜமா நாலஞ்சு புள்ளைங்களோட ஓடியாடி விளையாட விடணும். அப்பத்தான் எல்லாம் மாறும்’னு அக்கம்பக்கத்துல சொன்னாங்க. அப்படியாச்சும் நம்ம புள்ளயும் மத்த புள்ளைங்க மாதிரி வந்துடமாட்டானாங்கிற ஏக்கத்துலதான் இந்த ஸ்கூல்ல கொண்டாந்து சேர்த்தோம். நாங்க நெனச்சது வீண் போகல.
இங்க வந்த பின்னாடிதான், இவனுக்கு இறகுப்பந்து விளையாட்டுல நாட்டம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டோம். டீச்சர்கள் இதை எங்ககிட்ட சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டோம். அப்பவே இவனுக்கு இறகுப்பந்து மட்டை வாங்கிக் குடுத்து பயிற்சி குடுக்க வைச்சோம். மாஸ்டர்ஸ் சொல்றத அப்படியே கேட்டு விளையாட ஆரம்பிச்சவன், கொஞ்ச நாளைக்குள்ளேயே பக்கா ஆட்டக்காரனா கலக்க ஆரம்பிச்சிட்டான். சுத்துவட்டாரத்துல நடந்த பல போட்டிகள்ல கலந்துக்கிட்டு, கோப்பைகள், பதக்கங்கள்னு வாங்கிக் குவிக்க ஆரம்பிச்சப்ப நாங்க அடைஞ்ச சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்லமுடியாது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவுல வர்ற 30-ம் தேதி தொடங்குது. அதில் கலந்துக்கிட்டு திறமையை வெளிப்படுத்துறதுக்கு அனாஸுக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அனாஸ் நிச்சயம் தங்கப் பதக்கத்துடன் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பு வான்” மகனை கட்டித் தழுவி முத்தமிடுகிறார் ஆசிஃபா.
மனவளர்ச்சி குன்றியவர்களுக் காகவே சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. யூனிஸ் ஸ்ட்ரீவர் கென்னடி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூகேசில் நகரில் அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் 7-ம் தேதி வரை நடக்கின்றன. இதில் 70 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் தங்களது தனித்திறமையை காட்டவிருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருவன் முகமது அனாஸ்!
முகமது அனாஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதில் ஆதர்ஸ் பள்ளி நிர்வாகத்துக்கும் மிகவும் பெருமை. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் சங்கீதா வள்ளி, “இங்க இருக்கிற புள்ளைங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா இருப்பாங்க. சில புள்ளைங்க என்ன சொன்னாலும் தாங்கள் செய்யுற தப்பைச் செஞ்சுக்கிட்டேதான் இருப்பாங்க. அதுக்காக அவங்க மேல கோபப்பட முடியாது. ஏன்னா.. இவங்க யாரும், தெரிஞ்சு தப்பு பண்றதில்லை. ஒருசில பிள்ளைங்க எது சரி, எது தப்புன்னு தங்களுக்கா தெரியாட்டிப் போனாலும் நாங்க சொல்றத வைச்சு அதன்படி நடந்துக்குவாங்க. அனாஸும் அப்படித்தான். அதனால்தான் அவனால மூன்றாம் வகுப்பு படிக்கிறப்பவே இறகுப்பந்துப் போட்டியில சாதனை படைக்க முடிஞ்சுது. அதுக்காக இவன் எடுத்துக்கிட்ட முயற்சிகளும் கடின உழைப்பும் இன்னும் எங்க கண் முன் நிழலாடுது’’ என்றார்.
கடின உழைப்பால் ஒலிம்பிக் பயணம் கிளம்பும் தகுதியைப் பெற்றிருக்கும் முகமது அனாஸ், இறகுப்பந்து விளையாட்டில் மட்டுமின்றி, ஓட்டப்பந்தயங்களிலும் கலந்துகொண்டு வெற்றிகளை குவித்திருக்கிறான். விடுமுறை நாட்களில் தாத்தாவுடன் டிரக்கிங் செல்வதற்காக ஏற்காட்டுக்கு வந்துவிடுவானாம் அனாஸ்.
“சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு ரூ.1.50 லட்சம் செலவாகும். அரசின் மானியம் போக, மீதி 65,000 ரூபாயை பெற்றோர் செலுத்தணும். அவ்வளவு பணத்தை அவங்களால புரட்டமுடியாது. அதனால, வெளிநாட்டில் இருக்கிற சொந்தக்காரங்க, நண்பர்கள் மூலமா நான்தான் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சுகுடுத்தேன். குழந்தைகளை கனவு காணச் சொன்னார் அப்துல்கலாம். கனவுன்னாலே என்னன்னு தெரியாத அனாஸ், ஒலிம்பிக்கில் சாதனை படைக்க ஆஸ்திரேலியா போறான். அவன் தங்கப்பதக்கத்துடன் தாயகம் திரும்ப வேண்டும். அதுதான் அவனைப் போல் உள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியாக இருக்கமுடியும்” நெகிழ்ந்துபோய் சொன்னார் தலைமையாசிரியர் சங்கீதா வள்ளி.