ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என மத்திய அரசின் 24 விதமான உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக சிவில் சர்வீசஸ் என்ற போட்டித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. இதற் கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு ஆகும். குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொருத்த வரையில் பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 ஆகவும், ஓபிசி வகுப்பினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்யும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.பாஸ்வான் தலைமையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்த குழு அண்மையில் தனது அறிக்கையை யுபிஎஸ்சி-யிடம் சமர்ப்பித்தது. அதில், தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பைக் குறைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பைக் குறைப்பதை பெரும்பாலானோர் வரவேற்கி றார்கள். எனினும், வயது வரம்பை குறைப்பதால் ஏற்படும் பாதிப்பு களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் பயிற்சி மைய இயக்குநர், ஐஏஎஸ் தேர்வு மாணவர் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
டி.எஸ்.ஸ்ரீதர் (ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச் செயலாளர்):
ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பைக் குறைப்பதால் இளைஞர் கள் பணிக்கு வருவார்கள். அவர்கள் துடிப்புடன் பணியாற்றுவார்கள். இளம் வயதிலேயே பணியில் சேர்ந்துவிட்டால் அதிக காலம் அவர்களால் பணியாற்ற முடியும். எனவே, உயர்ந்த பதவிகளுக்கும் செல்ல முடியும். அதேநேரத்தில் சில சமயங்களில் அவசரப்பட்டு முடிவு எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. வயது வரம்பைக் குறைப்பதால் நன்மைகளும் இருக்கின்றன. அதேபோல் பாதிப்புகளும் உண்டு.
ஜி.திலகவதி (ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி):
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் மட்டுமின்றி பயிற்சிக்கும், பராமரிப்புக்கும் அரசு அதிகம் செலவு செய்கிறது. அதன் பயன்பாடு சமுதாயத்தைச் சென்றடைய வேண்டுமானால் அவர்களின் பணிக்காலம் சற்று அதிகம் இருக்க வேண்டும். தேர்வு எழுத 40 வயது வரை வாய்ப்பு அளித்தால்கூட அதுவரையிலும் மாணவர்கள் படித்துக்கொண்டேதான் இருப் பார்கள். வயதான பிறகு தேர்ச்சி பெற்றால் பின்னாளில் பெரிய பதவிக்குச் செல்ல முடியாது. எனவே, வயது வரம்பை குறைப்பதில் தவறு ஏதுமில்லை.
டி.சங்கர் (சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர்):
ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவது என்பது விடாமுயற்சி சம்பந்தப்பட்ட விஷ யம், வயது வரம்புக்கு எவ்வளவு ஆண்டுகள் தளர்வு கொடுத்தா லும் மாணவர்கள் படித்துக் கொண்டேதான் இருப்பார்கள். 35 வயது வரை முயற்சி செய்கி றார்கள். அதன்பிறகும் வெற்றி பெறவில்லை என்றால் அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? 25 அல்லது 26 வயதுக்குள் தேர்வில் வெற்றிபெற்றால்தான் உயர்ந்த பொறுப்புக்குச் செல்ல முடியும். 35 வயதில் ஐஏஎஸ் அதிகாரியானால் நானும் ஐஏஎஸ் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, உயர் பதவிக்குச் செல்ல இயலாது. எனவே, வயது வரம்பைக் குறைக்கும் முடிவு நல்ல விஷயம்தான். ஆனால், அதை உடனடியாக செய்யாமல், உரிய காலஅவகாசம் கொடுத்துவிட்டு நடைமுறைப்படுத்தினால் நல்லது.
ஆர்.கார்த்திகேயன் (ஐஏஎஸ் தேர்வு மாணவர்):
வயது வரம்பைக் குறைப்பதால் பயன்களும் உண்டு. அதேநேரத்தில் பாதிப்புகளும் உண்டு. பயன்கள் என்று பார்த் தால், இளைஞர்கள் அரசு உயர் பதவிக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். இளம் வயதில் பணிக்கு வரும் போது அவர்களை அரசு நிர்வாக முறைக்குள் எளிதில் கொண்டு வந்துவிடலாம். வயதானவர்கள் எனில் ஒருமுறைக்குள் அவர்களை கொண்டுவர முயற்சிக்கும்போது கேள்வி கேட்பார்கள். இளம் வயதில் உயர் பணிக்கு வருபவர்கள் புதுமையாக எதையும் செய்வார்கள்.
அதே நேரத்தில் வயது வரம்பை குறைப்பதால் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் நகர்புறங்களில் இருப்பவர்களுக்கு சமமாக வர சற்று காலம் ஆகவே செய்யும். எனவே, அவர்களுக்கு சற்று அதிக வயது வரம்பு கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய மாணவர்களின் உரிமைகளைப் பறித்தது போலாகிவிடும்.