தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கோயம் பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 65-வது பிறந்தநாளை மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் மாநிலம் முழுவதும் நேற்று உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, தேமுதிக அலு வலகத்துக்கு நேற்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் சம்பத் உள்ளிட்டோர் நேரில் சென்று, விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ‘பீனிக்ஸ் பறவை’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட கேக் வெட்டி விஜயகாந் துக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கேக் ஊட்டினர். இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தும் கேக் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இந்த விழாவில் தேமுதிக இளை ஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: கூட் டணிக் கட்சி என்ற அடிப்படையில் விஜயகாந்தை மக்கள் நலக் கூட் டணி தலைவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித் தோம். அவர் நீடூழி வாழ வாழ்த்து கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்போம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி மாவட்டந்தோறும் பூர்வாங்கப் பணிகள் நடந்து வரு கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, “மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விஜயகாந்துக்கு நட்பின் அடிப்படையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தோம். உள்ளாட்சித் தேர்தல் பற்றி விஜயகாந்திடம் தற்போது எதுவும் பேசவில்லை. மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்து போட்டியிடுவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதனால் அதுபற்றி இப்போது கருத்து எதுவும் சொல்ல முடியாது. தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசாமல் காலத்தை வீணடித்து வருவது வேதனை அளிக்கிறது. 79 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி” என்றார்.