தமிழகம்

இளமையான முதல்வர் வேட்பாளர் - ஜி.கே.வாசனை முன்னிறுத்தி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே தலைவர் ஜி.கே.வாசன். அவர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்று தமிழக இளைஞர் காங்கிரஸார் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடங்கியுள்ளனர். இது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை கொடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் பலர், திடீர் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். ‘தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நாங்கள் நிரப்புவோம்’ என தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். பாஜகவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்து, நடிகர் ரஜினியை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த முதல்வர் வாசன்தான் என்று காங்கிரஸாரும் திடீர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். திமுக, அதிமுகவுக்கு போட்டியாக, தமிழக காங்கிரஸாரும் வலைதள பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் ஒன்று செயல்பட்டாலும், தமிழக இளைஞர் காங்கிரஸ் என்ற பெயரில் ஏராளமான முகநூல் பக்கங்கள் செயல்படுகின்றன.

ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களை முன்னிலைப் படுத்துகின்றனர். சமீபத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் பெயரிலான ஒரு முகநூல் பக்கத்தில், தமிழகத்தின் அடுத்த முதல்வராகத் தகுதியானவர் வாசன் மட்டுமே என்று ஸ்டேட்டஸ் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தப் பதிவு வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

‘தமிழகத்தின் எதிர்காலம்.. ஓர் அலசல்’ என்ற தலைப்பில் உள்ள அந்தப் பதிவில், ‘ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் எல்லோருமே 60 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத ஒரே தலைவர் 49 வயது இளைஞரான ஜி.கே.வாசன் மட்டுமே’ என குறிப்பிட்டுள்ளனர்.

மேலிட உத்தரவின்றி வாசனை முன்னிறுத்தி அவரது ஆதரவாளர்கள் செயல்படுவதாக மற்ற கோஷ்டித் தலைவர்களிடையே சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, முகநூல் பக்க அட்மின் மேட்டூர் தங்கவேலிடம் கேட்டபோது, ‘‘மத்திய அமைச்சராக இருந்து எந்தவித ஊழல் குற்றச்சாட்டுமின்றி திறம்படவாசன் பணியாற்றினார். தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறார். அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை’’ என்றார்.

ஞானதேசிகன் கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘நீங்கள் கூறும் முகநூல் பக்கம் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கமில்லை. இதுபற்றி வேறு எந்த விவரமும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை’’ என்று முடித்துக்கொண்டார்.

SCROLL FOR NEXT