தமிழகம்

மின் பிரச்சினை: மத்திய அரசை குறைகூறி பிரதமருக்கு ஜெ. கடிதம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவுவதற்கு, மத்திய அரசைக் குறைகூறி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்திய அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்கள் திடீரென உற்பத்தியை குறைத்திருப்பதால், தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க திட்டமிட்ட சதியோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் முழு அளவிற்கு மின் உற்பத்தியை செய்ய மத்திய எரிசக்தி துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் விவரம்:

'தமிழகத்தில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து மின் சப்ளையில் திடீரென ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறை பிரச்சனையில் தாங்கள் அவசரமாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

2011-ம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் மின்சார நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. முந்தைய திமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்களோ, புதிய திட்டங்களோ இல்லாத நிலையில் மின்சார தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் இடைவெளி இருந்தது.

மின் பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன். புதிய அனல் மின் நிலைய திட்டங்களை அமைக்கும் பணியை துரிதப்படுத்தினேன். மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படச் செய்தேன். குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

உபரி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை தமிழகம் வாங்குவதற்கு வசதியாக மின் பகிர்மான அமைப்பை மேம்படுத்த வேண்டுமென்று தங்களை கேட்டுக் கொண்டிருந்தேன். மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொண்டு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எனது தலைமையிலான அரசு எடுத்த மகத்தான முயற்சிகளை தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்க துவங்கியது.

தமிழக அரசின் மகத்தான சாதனை காரணமாக மத்திய அரசின் உதவியின்றி மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்டது. ஜூலை மாதம் முதல் இந்த மாதம் மத்தி வரை லோடுஷெட்டிங் இல்லை. கடந்த 25.10.2013 அன்று சட்டசபையில் நான் உரையாற்றும் போது தமிழகத்தில் மின்தேவைக்கும், சப்ளைக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த இடைவெளி நீக்கப்பட்டது என்று குறிப்பிட்டேன். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை அப்போது எடுத்துரைத்ததுடன் 2014-ம் ஆண்டில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும் என்று குறிப்பிட்டேன்.

விவசாயிகள், பொதுமக்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள் ஆகியோர் தமிழகத்தில் மின்நிலைமை சீரானதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்கள். மின் பற்றாக்குறையை மாற்றியமைக்க நான் எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

சட்டசபையில் நான் அறிவித்த பிறகு தமிழகத்தில் மின்நிலைமை திடீரென சீர்குலைய ஆரம்பித்தது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட மின்திட்டங்கள், புதிதாக மின் உற்பத்தியை பரிசோதனை கட்டமாக செய்து வந்த மின்நிலையங்கள் ஆகியவற்றில் மின் உற்பத்தி குறைந்ததே காரணம் என்று தெரியவந்தது.

திடீரென்று, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட 2500 மெகாவாட் மின் உற்பத்தி குறைப்புக்கு தேசிய அனல் மின்உற்பத்தி நிலையம், பெல் நிறுவனம், இந்தியன் எண்ணெய் கழகம், கோல் இந்தியா நிறுவனம் ஆகியவையே காரணம்.

கடந்த 16.11.2013 அன்று வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒவ்வொன்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில் மின் உற்பத்தி துவங்கிய நிலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த பிரிவு பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோதனை அடிப்படையில் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்த பிரிவு உள்ளது. இதனால் 600 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தேசிய அனல் உற்பத்தி கழகமும், மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின்உற்பத்தி கழகமும் இணைந்து சென்னைக்கு அருகே வள்ளூர் என்ற இடத்தில் 2 மின் உற்பத்தி பிரிவுகளை அமைத்தது. இங்கு 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கோல் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான மகாநதி நிலக்கரி நிறுவனம் போதிய நிலக்கரி சப்ளை செய்யாததால் ஒரு மின் பிரிவில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கோல் இந்தியா நிலக்கரி சப்ளை செய்யாததால் இங்கு மட்டுமல்ல தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களுக்கும் நிலக்கரி சப்ளை செய்யாததால் அங்கும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய பிரிவு இருந்தாலும் நிலக்கரி இல்லாததால் மின் உற்பத்தி நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையங்கள் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து சமாளித்து வருகின்றன.

இதற்கிடையே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திலிருந்து 777 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் பழுது பார்க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 336 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சென்னை கல்பாக்கத்தில் உள்ள ஒரு பிரிவிலும், கைக்கா அணு மின் நிலையத்தில் ஒரு பிரிவிலும் உற்பத்தி நடைபெறாததால் 241 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் போதிய நாப்தா எரிபொருளை சப்ளை செய்யாததால் அதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பிபிஎன் நிறுவனம் செயல்படவில்லை. இத்தகைய சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

எனவே, மத்திய அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கையால் 2500 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான 12 அனல் மின்நிலையங்களும் அவற்றின் முழு கொள்ளளவிற்கு உற்பத்தி செய்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு மற்றும் கூட்டுத் துறையில் உள்ள அனல் மின் நிலையங்களில் உற்பத்தி ஒரே நேரத்தில் குறைந்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான இத்தகைய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் குறைந்த அளவில் மின் உற்பத்தி செய்வதை தமிழக மக்களால் நம்ப முடியவில்லை.

எனவே, மத்திய எரிசக்தி துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு உரிய உத்தரவை தாங்கள் பிறப்பித்து மத்திய அரசு நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து தமிழகத்திற்கு வழங்க செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசிற்கு சொந்தமான பொது நிறுவனங்களில் தொடர்ந்து மின் உற்பத்தி குறைந்திருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க திட்டமிட்ட சதியோ என்று மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும்' என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT