தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில்1652 மையங்களும், தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மணலி புதுநகரில் உள்ள பிசி திருமண மண்டபத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் (டிஎம்எஸ்) டாக்டர் கே.செங்குட்டுவன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பெற்றோர் ஆர்வமாக தங்களுடைய குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். சுங்கச் சாவடிகளில் முகாமிட்டிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் பயணத்தில் இருந்த குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினர். விடுபட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் கை விரலில் மை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறும்போது, “தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 66 லட்சம் குழந்தைகளுக்கு (93 சதவீதம்) போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் முகாம் செயல்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம். கிராமப்புற செவிலியர்கள் வீடுவீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போடுவார்கள். இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது” என்றார்.
சென்னையில் 93 சதவீதம்
சென்னையில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 415 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 6 ஆயிரத்து 500 பணியாளர்கள் மூலம் 1624 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 6 லட்சத்து 48 ஆயிரத்து 760 குழந்தைகளுக்கு (93.4 சதவீதம்) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.