தமிழகம்

தமிழ்நாடு இசை பல்கலை.க்கு சிண்டிகேட் அமைப்பதில் தாமதம்: தன்னாட்சி அந்தஸ்து கிடைப்பது தள்ளிப்போகும்

எஸ்.சசிதரன்

முதல்வர் முயற்சியால் உருவான தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்துக்கு சிண்டிகேட் (ஆட்சிக்குழு) அமைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதத்தால், அக்கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைப்பதும் தாமதமாகி வருகிறது. இன்னும் சில மாதங்களில் வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், சிண்டிகேட் அமைப்பது இன்றியமையாதது என்று இசை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாரம்பரிய கலை மற்றும் இசைத் துறையில் தொன்றுதொட்டு சிறந்து விளங்கி வருகிறது தமிழகம். நமது கலை, கலாச்சாரம் மற்றும் சிற்பக் கலை ஆகியவை மேற்கத்திய தாக்கத்தால் பாதிக்கப்படுதைத் தடுக்கும் நோக்கிலும், கலைஞர்கள் தங்களது திறமைகளை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் வகையிலும் தமிழகத்தில் இசை, கலை மற்றும் நுண்கலைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் இசைப் பல்கலைக்கழகம் உதயமானது. புதிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பிரபல வீணை இசைக் கலைஞர் வீணை காயத்ரி நியமிக்கப்பட்டார். அதுவரை அவர் சென்னை இசைக் கல்லூரியின் இயக்குநராக இருந்துவந்தார். பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், நாகஸ்வரம், தவில், மிருதங்கம், கடம், மோர்சிங், நட்டுவாங்கம், பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றில் பட்டப்படிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய இடங்களில் உள்ள அரசு இசைக் கல்லூரிகள், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கல்லூரிகள், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக் கல்லூரி ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர அரசு உதவி பெறும், உதவி பெறாத கலை மற்றும் இசைக் கல்லூரிகளும் இணைக்கப்பட உள்ளன. வரும் கல்வியாண்டு முதல் பரதநாட்டியம், வீணை உள்ளிட்ட சில கலைகளுக்கு பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், இசைப் பல்கலைக்கழகத்துக்கு சிண்டிகேட் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பட்டியல், இறுதி செய்யப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது என இசைக்கல்லூரி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:

இசைப் பல்கலைக்கழகத்துக்கு 6 பேர் கொண்ட சிண்டிகேட் அமைக் கப்பட வேண்டும். இதற்காக 12 பேரின் உத்தேசப் பட்டியலை கடந்த நவம்பரில் துணைவேந்தர் வீணை காயத்ரி பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பட்டியல் முதல்வரின் கவனத்துக்கு சென்றதாகத் தெரியவில்லை. மேலும், கலை மற்றும் பண்பாட்டுத் துறையை கவனிக்கும் அமைச்சருகே பல மாதம் தாமதமாக கடந்த வாரம்தான் பட்டியல் அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த தேவையற்ற தாமதத்துக்கு, அரசுத் துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர்தான் காரணம்.

அவர், வேறு ஒரு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரோடு சேர்ந்து புதிய பட்டியலை தயாரித்திருப்பதாகத் தெரிகிறது. அதில், தகுதியற்ற சிலர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத் தில் இருந்து அனுப்பப்பட்ட அசல் பட்டியல் என்ன ஆனதென்றே தெரியவில்லை. தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதால் முதல்வரின் கவனத்துக்கு பட்டியல் போகுமா என்று தெரியவில்லை.

இன்னும் சில மாதங்களில் முழு அளவில் இப்பல்கலைக்கழகம் செயல்படவுள்ள நிலையில், சிண்டிகேட் அமைப்பதில் தேவை யற்ற தாமதத்தால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதிலும் தாமதம் ஏற்படும். பல்கலைக்கழகத்துக்கு தொடர்பே இல்லாமல், வருவாய்த் துறை அதிகாரியை பதிவாளராக நியமித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் விளக்கம்

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, ‘‘சிண்டிகேட் உறுப்பினர்களுக்கான உத் தேசப்பட்டியல் தாமதமானது தொடர்பான புகார் என் கவனத்துக்கு சமீபத்தில்தான் வந்தது. இப்பல்கலைக்கழத்தை விரைவில் அமைக்க முதல்வர் தீவிரமாக உள்ளார். தேர்தலுக்குப் பிறகு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT