தமிழக முதல்வராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்) :
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று சிறை சென்றபோது, ஓ.பன் னீர்செல்வத்தைதான் முதலமைச் சராக நியமித்தார். அதுமட்டுமல்ல, அவர் நோய்வாய்ப் பட்டு அப்போலோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக் கும்போது கூட முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு அந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். ஆனால், சசிகலாவிற்கு ஆட்சிப் பொறுப்பிலும் எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை, கட்சியிலும் எந்தப் பொறுப்பையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. திமுகவை பொறுத்தவரை விரைவில் ஜனநாயக அடிப்படையில் நடைபெறும் தேர்தலில் இந்தப் பிரச்சினையை சந்திப்போம்.
சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):
முதலமைச்சர் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்று கருதி சட்டப்பேரவை உறுப் பினர்கள் ஒன்றுகூடி சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு மாற்றம் செய்து கொள்ளவும், புதிய முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் எம்எல்ஏக்களுக்கு உரிமை உள்ளது.
தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக மாநில தலைவர்):
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள்தான் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில், 2 மாதங்களுக்குள் அவரை மாற்ற என்ன தேவை அல்லது அவசியம் வந்துள்ளது. அவசர, அவசரமாக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என புரியவில்லை. கட்சி என்று வந்தால் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். ஆட்சி என்று வரும்போது மற்ற கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
ஜெயலலிதாவை முதலமைச்சராக முன்னிறுத்தி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இப்போது சம்பந்தமே இல்லாத ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார்கள். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா ஆகியோர் அமர்திருந்த நாற்காலியில், அமலாக்கப்பிரிவு வழக்குகளையும், சொத்துக் குவிப்பு வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் சசிகலா அமரப்போகிறார் என்பதை நினைக்கும்போது தமிழ் நாட்டின் எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சமும், பதற்றமும் ஏற்படுகிறது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள வி.கே.சசிகலாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் குறித்து மக்கள் மத்தியில் உள்ள கருத்துகளையும் கணக்கில் கொண்டு அவர் செயல்படுவார் என நம்புகிறேன்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):
சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள காலம் மிகவும் நெருக்கடியான காலம் என நான் கருதுகிறேன். தமிழகத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி ஆற்றுப் பிரச்சினை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. சசிகலா முதல்வராக எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்):
ஆட்சியை மக்கள் அதிமுகவிடம் ஒப்படைத்துள்ளனர். யாரை சட்டப் பேரவை குழு தலைவராக தேர்ந் தெடுப்பது, முதல்வராக்குவது என்பது அந்த கட்சியின் முழுமையான உட்கட்சி விவகாரம். இருப்பினும், சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன்.
கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):
ஒருமனதாக இந்தத் தேர்வு அமைந்திருப்பதால் கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு என்ற இரட்டை அதிகார நிலைப்பாட்டால் அதிகார முரண்கள் ஏற்பட இனி இடமில்லை என்பதோடு, முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் ஒருவரே என்பதால் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் கட்டுக்கோப்பும், கட்டுப்பாடும் நிலைநிறுத்திக்காட்டப்பட்டுள்ளது. பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித்தலைமை ஆட்சித்தலைமை இரண்டையும் பெற்று அரசியல் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டியது.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்):
பெரும்பான்மை பலம் உள்ள கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வரை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில் சசிகலா முதல்வராக இருக்கிறார். முதல்வராக அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.