தமிழகம்

ஸ்ரீபெரும்புதூரில் தொல்லியல் துறை தொல்லை தீர்வது எப்போது?

செய்திப்பிரிவு

# ஸ்ரீபெரும்புதூர் வழியாக அமைந்துள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் கடக்கும் பகுதிகளில் விபத்துகள் தவிர்க்க முடியாததாக உள்ளன. எனவே, தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பள்ளிகளின் அருகில், மாணவர்கள் சாலையைக் கடந்து செல்ல நடை மேம்பாலங்கள் தேவை.

# ஆலந்தூர், அம்பத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதிகள் படுமோசம். குறிப்பாக, குன்றத்தூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சாலை வசதி இல்லாததால், அரசுப் பேருந்துகள் அந்தப் பகுதிகளில் இயக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்வோரும், பிரசவம் மற்றும் விஷக்கடி உள்ளிட்ட அவசரச் சிகிச்சைக்குச் செல்வோரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

# பல்லாவரத்தில் பல இடங்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதனால், அந்தப் பகுதியில் வசிப்போர் புதிதாக வீடு கட்டவும், கட்டிய வீடுகளைப் புனரமைக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்துவருகிறது. மக்களும் சில அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தியும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை. மக்கள் அடர்த்தியாக வசிக்கும் இந்தப் பகுதியில் தொல்லியல் துறையின் விதிகளைத் தளர்த்த வேண்டும். இந்தப் பகுதியில் மின் இணைப்பு வழங்குவதற்காக இருந்த தடையை, தமிழக அரசு நீக்கியிருப்பது ஆறுதலான விஷயமாக மக்கள் கருதுகின்றனர்.

# குரோம்பேட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்ளது. ஆனால், அங்கு நவீன உபகரணங்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் இல்லாததால், தரமான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக உள்ளது.

# போரூரில் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த ஆட்சியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டன. இந்த ஆட்சியில் மக்கள் மற்றும் சி.பி.எம். கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பணிகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

# தொழிற்சாலைகளுக்காகவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் தொகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும், நிலத்தை அளித்தவர்களுக்குத் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது மக்களின் குமுறலாக இருக்கிறது.

# தொகுதி முழுவதும் பல இடங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால், நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது. பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

# குன்றத்தூர் - அமரம்பேடு பஞ்சாயத்து அருகே சாலைகளின் ஓரத்திலேயே டன் கணக்கில் கண்ணாடிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இப்பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி வளாகங்களிலேயே கண்ணாடிக் கழிவை அரைத்துத் தூளாக்கி அதை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு கண்ணாடி தூசுகளால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கழிவுகளால் சாலையில் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT