தமிழகம்

மே மாதத்தைப் போல் ஜூன் மாதத்திலும் வெப்பம் வாட்டும்: நிபுணர்கள்

கே.லட்சுமி

சென்னையில், மே மாதத்தைப் போலவே ஜூன் மாதமும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். சராசரியாக 37 டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மே மாதம் முடிந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் வெப்பம் வாட்டி வதைத்துவிட்டது. சென்னையில் பல நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. 10 நாட்கள் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து தாக்கியது. தொடர்ந்து 6 நாட்களுக்கு அனல் காற்று வீசியது.

இந்நிலையில் மே மாதத்தைப் போலவே ஜூன் மாதமும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். சராசரியாக 37 டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையின் புறநகர் பகுதிகள் அதுவும் தெற்குப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேடவாக்கத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக பதிவானது. கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற வெப்ப நிலை அப்பகுதியில் பதிவானதில்லை.

நேற்று (புதன்கிழமை) மேடவாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தடையற்ற சூரிய கதிர் வீச்சே வெப்பம் அதிக அளவில் வீசக் காரணமாக இருந்ததாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஜூன் மாதத்திலும் மே மாதம் போலவே வெப்பம் வாட்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2008-ம் ஆண்டு அதிக வெப்பம் பதிவானது. 21 நாட்கள் வெப்பம் அதிக அளவில் இருந்தது. அதன் பின்னர் 2012-ல் 10 நாட்கள் தொடர்ச்சியாக அதிக வெப்பம் இருந்தது என்பதை நினைவுகூர்ந்தார் வானிலை வலைபதிவர் கே.ஸ்ரீகாந்த்.

SCROLL FOR NEXT