மதுரை எம்ஆர்டிடி நிறுவனம் மாநிலம் முழுவதும் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் எம்ஆர்டிடி (மதுரை ரூரல் டெவலப்பென்ட் டிரான்ஸ்பர்மேஷன் இந்தியா லிட்.) இந்நிறுவனம் ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அனுமதியின்றி வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிறுசேமிப்பு, முதியோர் சேமிப்பு, குழந்தைகள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, அதிக வட்டி தருவதாக ஆசைக்கூறி மாநிலம் முழுவதும் மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இந்தப்புகாரின் பேரில் எம்ஆர்டிடி தலைவர் சுரேஷ்பாட்சா மற்றும் முத்துராஜு, தமீம், வீரராஜலிங்கம் உள்ளிட்ட 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் எம்ஆர்டிடி நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளை அமைத்து சுமார் 70 ஆயிரம் பேரிடம், ரூ.100 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மதுரையில் பல்வேறு வங்கிகளில் எம்ஆர்டிடி நிறுவனத்தின் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ.18.86 கோடியை போலீஸார் முடக்கியுள்ளனர்.
இதனிடையே, எம்ஆர்டிடி மோசடி குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி நாகர்கோவில் இறச்சகுளத்தைச் சேர்ந்த எஸ்.ஹெரால்டு சைமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எம்ஆர்டிடி நிறுவனத்தில் நான் ரூ.5 லட்சம் முதலீடு செய்தேன். என் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் சேர்ந்து ரூ.45 லட்சம் வரை முதலீடு செய்தனர். பின்னர் எம்ஆர்டிடி நிறுவனம் ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் அனுமதி பெறாதது தெரியவந்தது. இதனால் பணத்தை திரும்ப கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
வெறும் கம்பெனி சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்து கொண்டு வங்கி நடவடிக்கைகளில் எம்ஆர்டிடி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனது புகாரின்பேரில் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தார். பொதுவாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்யும் வழக்கை, மதுரையில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்துக்குத்தான் அனுப்ப வேண்டும்.
ஆனால் என் புகாரின்பேரில் பதிவு செய்த வழக்கை, நாகர்கோவில் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதற்காக எம்ஆர்டிடி நிறுவனத் தலைவர் சுரேஷ் பாட்சாவிடம் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர். தற்போது, எனது புகாரில் உண்மையில்லை எனக்கூறி வழக்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.