தமிழகம்

சென்னை மாநகராட்சியை பாமக கைப்பற்றும்: ராமதாஸ் நம்பிக்கை

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை பாமக வசப்படுத்தும் என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமகவின் 28-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

பாமக தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்தில் பாமக எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளோம். தமிழகத்தில் மாற்றப்பட வேண்டிய கட்சிகள்தான் திமுக, அதிமுக. அந்த இரு கட்சிகளையும் ஒழிக்க மக்கள் முன் வர வேண்டும்.

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குகிறார், 230 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளார். மரம் நடுதல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது பாமக தான்.

2015 பிப்ரவரியில் சேலத்தில் நடந்த மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். அப்போது, மக்களோடு தான் கூட்டணி என்றோம். நாங்கள் அப்படி சொன்ன பிறகும், வேறு கூட்டணிக்கு செல்வோம் என்று பலரும் கூறினர். ஆனால், மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்தோம். சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எங்கள் கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டோம்.

உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் உள்ள 200 வட்டங்களிலும் பாமக வெற்றி பெறும். சென்னையை மாற்றிக் காட்டுவோம் என்று கூறிய அதிமுக, திமுக ஏமாற்றத்தையே தந்தன. பாமகவுக்கு வாய்ப்பு தந்தால், உண்மையிலேயே சென்னை மாநகராட்சியை மாற்றிக் காட்டுவோம்.

SCROLL FOR NEXT