‘‘காங்கிரசுடன் திமுக இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் பாஜகவுக்கு ஆதரவளித்தோம். ஆதரவுக்கான முடிவை சசிகலாதான் எடுத்தார்’’ என தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்தார்.
அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர், செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் அறிவுரைப்படி, மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துள்ளார். முதல்வர் தெரிவித்ததை சசிகலாவிடம் தம்பிதுரை தெரிவித்துள்ளார். தன்னிடம் சசிகலா கூறியதை முதல்வரிடம் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று சசிகலாவின் அனுமதியோடுதான் முதல்வர் அறிவித்தார். மறுநாள் தினகரன் இதே முடிவை அறிவித்தார்.
பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்பதை 100 சதவீதம் சசிகலாவின் அனுமதியோடுதான் முதல்வர் அறிவித்தார். இதை இன்று சிலர் மறுக்கலாம். நடந்தது என்ன என்பது எங்களுக்கு தெரியும். கட்சியில் உள்ள கருத்து வேறுபாடுகள் சரிசெய்யப்படும்.
தவறு இல்லை
இன்றைய சூழலில் காங்கிரசுக்கோ, பாஜகவுக்கோதான் ஆதரவு தெரிவிக்க வேண்டும். திமுக காங்கிரசுடன் இருக்கிறது. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் பாஜகவுக்கு ஆதரவளித்தோம். காங்கிரசுடன் திமுக இல்லாவிட்டாலோ, காங்கிரஸ் எங்களிடம் ஆதரவு கோரியிருந்தாலோ பேசியிருக்கலாம். ஆனால், ஆதரவு கோரவில்லை. பாஜகவில் ஆதரவு கேட்டார்கள். ஆதரவளித்ததில் தவறு இல்லை.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.